Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 நவம்பர் (ஹி.ச.)
கடந்த சில மாதங்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசியல் கட்சித் தலைவர்களின் வீடுகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் இ - மெயில் மூலம் வந்த வண்ணம் உள்ளன.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதுச்சேரியில் உள்ள துணை நிலை ஆளுநர் மாளிகை, புதுச்சேரி முதல்வர் இல்லம், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வீடு, சென்னை உயர்நீதிமன்ற வளாகம், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் உள்ள சுங்க தலைமை அலுவலகம், அண்ணா அறிவாலயத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
அதே போன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இல்லம், சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகை, பா.ஜ.க தலைமை அலுவலகம், நடிகைகள் திரிஷா, நயன்தாரா நடிகர் எஸ்.வி. சேகர், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் நடிகர் அருண் விஜய் உள்ளிட்டோர் இல்லத்திற்கும், சென்னையில் உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இலங்கை தூதரகத்திற்கும், ஐ.டி. நிறுவனங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக சென்னையில் இன்று
(நவ 12) காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது,
சென்னையில் கடந்த 7 மாதங்களில் வெடி குண்டு மிரட்டல் தொடர்பாக 342 வழக்கு பதியப்பட்டுள்ளது. மிரட்டல் விடுக்கும் நபர்களுக்கு தமிழகத்தில் நடக்கும் முக்கிய சம்பவம் தொடர்பாக அதில் தொடர்புடைய பெயர்களில் மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த மிரட்டல்கள் வி.பி.என்., டோல் ஆகியவை மூலம் அனுப்படுகிறது. இதில் தொடர்புடைய நபர்களை நெருங்கிவிட்டோம்.
மத்திய குற்றப்பிரிவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு புகார் அளித்தவர் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வங்கி மோசடியில் வங்கி ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சொத்து அபகரிப்பில் உயிருடன் இருப்பவர்கள் பெயரில் இறப்பு சான்றிதழ் மூலம் சொத்து அபகரிக்க உதவிய சார்பதிவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் பழுதாகி உள்ள சிசிடிவி சரி செய்யப்படும். சென்னையில் ரவுடிசம் குறைந்துள்ளது.கொலை சம்பவம் முந்தைய ஆண்டிலும் வெகுவாக குறைந்துள்ளது.
பாலியல் தொடர்பான குற்றவாளி உடனுக்குடன் கைது செய்யப்பட்டு வருகிறார். சென்னையில் உள்ள 4 ஆயிரத்து 900 ரவுடிகளின் அன்றாட நடவடிக்களை கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b