Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 12 நவம்பர் (ஹி.ச.)
கோவை, மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள கிராமப் பகுதிகளில் அடிக்கடி உணவு தேடி உலாவரும் காட்டு யானைகளால், அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பு யானை வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.
கோவை, தடாகம், தாளியூர், நஞ்சுண்டாபுரம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக உணவு தேடி கொண்டு ஊருக்குள் வரும் ஒற்றை காட்டு யானை வீடுகளில் வைக்கப்பட்டு இருந்த அரிசி, பருப்பு, மாவு போன்ற உணவுப் பொருட்களை உண்ண பழகி உள்ளது.
மேலும் வீடுகளுக்கு முன்பு நின்று உணவு உள்ளதா ? எனத் தேடுகிறது. அதனை துரத்த முற்பட்டால் தாக்கும் அபாயமும் இருந்து வருவதால், அப்பகுதி பொதுமக்கள் செய்வது அறியாது அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர்.
விவசாய விளைநிலங்கள், கால்நடைகளுக்கு வைத்து இருந்த தீவனங்களைத் தேடி வந்த காட்டு யானை தற்போது வீட்டில் உள்ள அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருள்களை தேடி அலைவதால், இன்னும் வரும் நாட்களில் என்ன நடக்குமோ ? என அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர் அப்பகுதி பொது மக்கள்.
இந்நிலையில் நேற்று இரவு பன்னிமடை, தீபம் கார்டன் பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானை அங்கு நாய்கள் குரைத்தும் கண்டுகொள்ளாமல், சென்றது.
அதனை அங்கு குடியிருக்கும் நபர் வீட்டின் மாடிக்குச் சென்று தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளார் அந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
எனவே தமிழக அரசும், வனத் துறையினரும் ஊருக்குள் உணவுப் பொருள்களை உண்டு ருசித்து பழகிய யானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / V.srini Vasan