Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 12 நவம்பர் (ஹி.ச.)
டெல்லியில் நேற்று முன்தினம் கார் வெடித்து சிதறியதில் பலியானோரின் எண்ணிக்கை நேற்று 13 ஆக உயர்ந்தது.
20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
போலீசாரின் அதிரடி விசாரணையில்,
இந்த கார் வெடிப்பு சம்பவம், தற்கொலை தாக்குதலாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த காரைப் பற்றி போலீசார் துப்பு துலக்கினார்கள்.
மேலும் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.
இதன் மூலம் கார் பற்றி பல்வேறு தகவல்கள் கிடைத்து உள்ளன.
காரை ஓட்டிச்சென்றவர் யார் என கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
அவர் ஜம்மு காஷ்மீரில் புல்வாமாவைச் சேர்ந்த உமர் முகமது (வயது 35) ஆவார்.
இவரும் பரிதாபாத்தில் உள்ள அல்பலா மருத்துவ பல்கலைக்கழகத்தில் டாக்டராக பணிபுரிந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்துக்கு காரணமானதாக கூறப்படும் டாக்டர் உமரின் உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து போனது. ஏற்கனவே உமரின் தாயார் சமீமா பேகம் மற்றும் 2 சகோதரர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
வெடிவிபத்தில் இறந்த உமரை அடையாளம் காணும் வகையில், சமீமாபேகத்துக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
மேலும் டாக்டர் உமரின் தந்தை குலாம் நபி பாத் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவருக்கும் டி.என்.ஏ. பரிசோதனை நடக்கிறது. மேலும் உமருடன் பணியாற்றிய 3 டாக்டர்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காஷ்மீரின் குர்பட்போரா குல்காமை சேர்ந்த டாக்டர் தாஜாமுல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீநகர் எஸ்.எம்.எச்.எஸ் மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டரை போலீசார் கைது செய்துள்ளனர். இவருக்கும் வெடி விபத்தில் இறந்த டாக்டர் உமருக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே வெடித்த ஹூண்டாய் i20 காரை விற்பனை செய்த டீலர் அரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM