Enter your Email Address to subscribe to our newsletters

பிஜீங், 12 நவம்பர் (ஹி.ச.)
இந்த உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஒரே கால அளவில் வாழ்வதில்லை. ஒவ்வொரு உயிரினத்தின் இதயத் துடிப்பை பொருத்து அவைகள் வாழும் கால அளவும் மாறுபடுகிறது.
அதாவது, வேகமாக துடிக்கும் இதயத்தை கொண்ட உயிரினங்களுக்கு ஆயுள் குறைவு என்றும், மெதுவாக துடிக்கும் உயிரினங்களின் ஆயுள் அதிகம் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஆறறிவு கொண்ட மனித இனத்தின் ஆயுட்காலம் 120 ஆண்டுகள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், விரல் விட்டு எண்ணும் அளவிலான மனிதர்களை இத்தனை ஆண்டுகள் வாழ்கிறார்கள். மற்றவர்கள் அதற்கு முன்னதாகவே மாண்டு போகிறார்கள்.
கொரோனாவிற்கு பிறகு மனிதர்களின் ஆயுட்காலம் வெகுவாக குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் ஒரு பக்கம் தெரிவிக்கின்றன.
இப்போது, நாடுக்கு நாடு மனிதர்களின் ஆயுட்காலம் மாறுகிறது. உதாரணமாக, ஜப்பானியர்களின் சராசரி ஆயுட் காலம் 84 ஆண்டுகள். அடுத்தபடியாக, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஸ்பெயின், இத்தாலி நாட்டு மக்களின் சராசரி ஆயுட்காலம் 83 ஆண்டுகள். சீனர்களின் ஆயுட்காலம் 77 ஆண்டுகள்.
ஆனால் ஆப்பிரிக்க நாட்டு மக்களின் சராசரி ஆயுட்காலம் 64 ஆண்டுகள் தான். அதிலும் ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியா நாட்டு மக்களின் சராசரி ஆயுட் காலம் 53 ஆண்டுகள் மட்டுமே.
இந்தியாவை எடுத்துக்கொண்டால், 1960-ம் ஆண்டுகளில் மக்களின் சராசரி ஆயுள் காலம் 46 ஆண்டுகளாகவே இருந்துள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் அது 55.6 ஆண்டுகளாக அதிகரித்தது. 2000-ல் அது 63.5 ஆண்டுகளாகவும், 2021-ம் ஆண்டில் 67 ஆகவும் இந்தியரின் ஆயுட் காலம் அதிகரித்தது.
இந்த நிலையில், மனிதனின் ஆயுட் காலத்தை மேலும் அதிகரிக்க முடியுமா? என்ற ஆய்வில் சீன ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுவந்தனர். அவர்கள் கண்டுபிடித்த மாத்திரையை எலிகளுக்கு செலுத்தி ஆய்வு செய்ததில், அதன் ஆயுட் காலம் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதே மாத்திரையை மனிதர்களுக்கு கொடுப்பதன் மூலம் அவர்களின் ஆயுட் காலத்தை 150 ஆண்டுகளாக அதிகரிக்க முடியும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.
தற்போது, ஆய்வு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லான்வி பயோசயன்சஸ் என்ற சீனா நிறுவனம் ஆன்டி ஹிங் எனப்படும் இந்த முதுமை எதிர்ப்பு மாத்திரைகளை உருவாக்கி வருகிறது.
இந்த மாத்திரைகள் உடலில் உள்ள சோனி செல்கள் என அழைக்கப்படும் ஆரோக்கியமான செல்களை காக்கும். அதே சமயம் வயதான செல்களை குறிவைத்து தாக்கி அழிக்கும், இந்த மாத்திரை திராட்சை விதை சாற்றில் இருந்து உருவாக்கப்படுகிறது.
அந்த நிறுவனம் நடத்திய சோதனையில் இந்த மருந்து வயதான செல்களை அழித்து ஆரோக்கியமான செல்களை பாதுகாப்பதன் மூலம் ஆயுள் காலம் நீடிப்பதாக கூறப்படுகிறது.
சரியான வாழ்க்கை முறை மற்றும் முறையான மருத்துவ சிகிச்சையை பெற்றால் மனிதர்கள் 150 வயது வரை வாழ உதவும் என்று லான்வி பயோசயன்சஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM