Enter your Email Address to subscribe to our newsletters

புதுடில்லி, 12 நவம்பர் (ஹி.ச.)
பிரேசிலின் பெலிமில் நடந்த சிஓபி30 என்ற மாநாட்டில் ஜெர்மன்வாட்ச் என்ற சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனம், 'பருவநிலை அபாய குறியீடு 2026' எனும் தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், 1995 முதல் 2024ம் ஆண்டு வரை நிகழ்ந்த இயற்கை பேரழிவுகளால் 130 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ரூ.15,000 கோடியளவுக்கான சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
புவி வெப்பமயமாதலால் ஏற்படும் பேரிடர்களுடன், வெள்ளம், புயல், வறட்சி மற்றும் வெப்ப அலைகளால் பாதிப்புகள் அதிகளவில் இருந்துள்ளன.
கடந்த 30 ஆண்டுகளில் இயற்கை பேரிடர்கள் அதிகம் பாதித்த நாடாக டொமினிகா உள்ளது. அதைத் தொடர்ந்து மியான்மர், ஹோண்டுராஸ், லிபியா, ஹைட்டி, கிரெனடா, பிலிப்பைன்ஸ், நிகரகுவா நாடுகளுக்கு அடுத்ததாக, 9வது இடத்தில் இந்தியாவும், 10வது இடத்தில் பஹாமாஸ் நாடுகளும் உள்ளன.
இந்தியாவில் மட்டும் கடந்த 30 ஆண்டுகளில் 430 இயற்கை பேரிடர்களில் சிக்கி 80,000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1998ம் ஆண்டு குஜராத் புயல், 1999ல் ஒடிசா சூப்பர் புயல், 2013ல் உத்தரகண்ட் வெள்ளபாதிப்பு உள்ளிட்டவை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
2024ம் ஆண்டில் மட்டும் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM