Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 12 நவம்பர் (ஹி.ச.)
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த முறையில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகளை டிசம்பர்
9-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை அளிக்கலாம். பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் 7.02.2026 அன்று வெளியிடப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான பவன்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த முறை-2026 தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 4-ந்தேதி தொடங்கிய கணக்கெடுப்புப் பணி அடுத்த மாதம் 4-ந்தேதி வரை நடைபெறும். வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் ஒவ்வொரு வாக்காளர்களின் வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று இரண்டு பிரதிகளில் கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்த படிவங்களை வாக்காளர்களிடமிருந்து திரும்ப பெறும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் திரும்ப வழங்கிடும் போது எந்தவொரு ஆவணங்களையும் இணைத்திட தேவையில்லை. இப்பணிகளுக்காக மாவட்டத்தில் மொத்தமுள்ள 3117 வாக்குச்சாவடிகளுக்கு தலா ஒரு அலுவலர் வீதம் 3117 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பணிகளை மேற்பார்வை செய்திடும் வகையில் 316 வாக்குச்சாவடி நிலை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பணிகளை மேற்பார்வை செய்து வருகின்றனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்தம் தொடர்பான வாக்காளர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில், கோவை கலெக்டர் அலுவலகத்தில் 1950-என்ற கட்டணம் இல்லா சேவை மையம் செயல்பட்டு வருகிறது. அலுவலக வேலை நேரத்தில் பொதுமக்கள் மேற்காணும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் பெறப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந்தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறும் என்பதால் வாக்காளர்கள் அனைவரும் கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து தங்கள் வீட்டிற்கு வரும் வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் தவறாது ஒப்படைக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகளை டிசம்பர் 9-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை அளிக்கலாம். பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் 7.02.2026 அன்று வெளியிடப்படும்.
எனவே மேற்காணும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத்திருத்தம்-2026 பணிகளுக்கு ஒத்துழைப்பினை நல்கிடுமாறும், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெறுவதை உறுதி செய்திடவும் வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b