Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 நவம்பர் (ஹி.ச.)
சென்னையை அடுத்துள்ள திருவேற்காட்டில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே செயல்பட்டு வரும் இன்பரசு என்பவருக்குச் சொந்தமான பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடையில் யாரும் எதிர்பாராத விதமாக இன்று (12.11.2025) திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீயானது கடையில் உள்ள பிற பகுதியிலும் பரவியது. மேலும் அருகில் உள்ள பகுதிக்கும் தீயானது பரவியது. இதனால் அப்பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
காலை நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடையில் பணியாளர்கள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதோடு பாதுகாப்பு கருதி அப்பகுதியில் இருந்து பொதுமக்களையும் காவல்துறையினர் வெளியேற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடையின் அருகில் உள்ள மின்மாற்றியில் (டிரான்ஸ்பார்மர்) இருந்து தீப்பொறி விழுந்து தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த தீ விபத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b