Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 நவம்பர் (ஹி.ச.)
சர்வதேச அமைப்புகளின் மூலமாக கடற்கரையின் நிலை குறித்து பல்வேறு கட்ட ஆய்வுகள் செய்யப்பட்டு தூய்மை, சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், பார்வையாளர் பாதுகாப்பு மற்றும் சிறப்பு வசதிகளின் அடிப்படையில் கடற்கரைகள் தேர்வு செய்யப்பட்டு சர்வதேச அளவில் அங்கீகரிக்கும் வகையில் நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னைக்கு அருகே உள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கோவளம் கடற்கரைக்கு தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக நீலக் கொடி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை டென்மார்க் நிர்ணயித்த உலகத் தரங்களை, கோவளம் கடற்கரை மீண்டும் பூர்த்தி செய்துள்ளது என்று ப்ளூ பிளாக் இந்தியா தேசிய அமைப்பாளர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்துள்ளார்.
கோவளம் கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இங்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மூங்கில் நிழற்குடைகள், நாற்காலிகள், உடை மாற்றும் அறைகள், கழிப்பறைகள், மிதக்கும் சக்கர நாற்காலிகள் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ள. அதேபோல, காலை 6 முதல் மாலை 6 மணி வரை பார்வையாளர்களின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் கண்காணிப்பு அமைப்புகள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கோவளம் கடற்கரைக்கு 2024-25 ஆம் ஆண்டில் 5.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளனர்.
இதுகுறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு கூறியதாவது,
உலகளாவிய சான்றிதழைப் பெறுவதற்காக தமிழ்நாட்டில் 10 கடற்கரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில், சென்னையில் 4, கடலூரில் 2, விழுப்புரம், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடியில் தலா ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
கோவளம் கடற்கரை தொடர்ந்து ஐந்தாவது முறையாக நீலக்கொடி சான்றிதழ் பெற்றதற்கு தமிழக அரசின் அர்ப்பணிப்பு மற்றும் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b