Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 12 நவம்பர் (ஹி.ச.)
நெல்லை மாவட்டம், முக்கூடல் அருகே பொட்டல்காலனி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சண்முகவடிவு.
இவரது மகன் வெற்றிவேல். இவருக்கும் மன்னார்கோயில், வேம்படி தெருவைச் சேர்ந்த இஷா (27) என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
வெற்றிவேல் வேலைக்காக சென்னை சென்றிருந்த நிலையில், இஷாவின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அவரைக் கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், இஷாவுக்கு சேரவேண்டிய நகைகள் மற்றும் பாத்திரங்களைத் தர வெற்றிவேல் மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இஷாவின் தாய் சுடலைமாடி (53), உறவினர்களான மாரிமுத்து (29), ஜெகதீஷ் (24), சீத்தாராமன் (35) ஆகியோர் வெற்றிவேல் மீது பகை கொண்டு, அவரைக் கொலை செய்ய திட்டமிட்டனர்.
கடந்த 17.07.2017 அன்று மாலை, பொட்டல்காலனியில் உள்ள ஒரு வீட்டில் வெற்றிவேல் அமர்ந்திருந்தபோது, அங்கு அரிவாள்களுடன் அத்துமீறி நுழைந்த மாரிமுத்து மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் வெற்றிவேலை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இக்கொலைக்கு இஷா, சீத்தாராமன், சுடலைமாடி ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர்.
இதுகுறித்து முக்கூடல் காவல்துறையினர் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு நெல்லை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி செல்வம் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் கருணாநிதி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேருக்கும் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மாரிமுத்து, ஜெகதீஷ் ஆகிய இரண்டு பேருக்கு கொலைக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும், அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக 9 ஆண்டுகள் சிறையும், தலா ரூ.5,000 அபராதமும், சட்டவிரோதமாகக் கூடிய குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறையும், தலா ரூ.2,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
சீத்தாராமன், இஷா, சுடலைமாடி ஆகிய 3 பேருக்கு கொலை செய்யத் தூண்டிய குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்படாததால் செண்பகம், அப்துல்ரகுமான் என்ற முருகன், ஆகிய இருவரும் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இந்த சிறை தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
Hindusthan Samachar / ANANDHAN