ஆன்லைன் ஷாப்பிங் புதிய விதிமுறைகள் - முக்கிய மாற்றங்களையும் கட்டுப்பாட்டையும் கொண்டு வரப்போகும் மத்திய அரசு
சென்னை, 12 நவம்பர் (ஹி.ச.) ஆன்லைன் ஷாப்பிங் இந்தியாவில் பெரிய வர்த்தக்கமாக உள்ளது. இந்த வர்த்தகம் இன்னும் பெரிய பரப்பை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசு இது தொடர்பான புதிய விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களையும் கட்டுப்பாட்டையும் கொண்டு வந
ஆன்லைன் ஷாப்பிங் புதிய விதிமுறைகள் - முக்கிய மாற்றங்களையும் கட்டுப்பாட்டையும் கொண்டு வரப்போகும் மத்திய அரசு


சென்னை, 12 நவம்பர் (ஹி.ச.)

ஆன்லைன் ஷாப்பிங் இந்தியாவில் பெரிய வர்த்தக்கமாக உள்ளது. இந்த வர்த்தகம் இன்னும் பெரிய பரப்பை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசு இது தொடர்பான புதிய விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களையும் கட்டுப்பாட்டையும் கொண்டு வந்துள்ளது.

அது என்னவென்றால், மின்னணு வர்த்தகத் தளங்களில் (E-commerce) விற்பனை செய்யப்படும் பொருட்களின் விவரங்களைக் கண்டறிவதற்கும், வரிசைப்படுத்துவதற்கும், அந்தப் பொருள் உற்பத்தி செய்யப்பட்ட நாட்டின் பெயரைக் குறிப்பிடும் அம்சத்தை கட்டாயமாக்கும் ஒரு முக்கிய வரைவு அறிக்கையை மத்திய நுகர்வோர் விவகாரத்துறை வெளியிட்டுள்ளது.

இது ஆன்லைன் ஷாப்பிங் உலகில் ஒரு புதிய வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் மிகப்பெரிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

ஏன் இந்த புதிய மாற்றம்?

மத்திய நுகர்வோர் விவகாரத்துறை வெளியிட்டுள்ள சட்டப்பூர்வ விதிகளில் (பேக்கிங் செய்யப்பட்ட) விதிமுறைகள் 2011-ல் (Legal Metrology (Packaged Commodities) Rules, 2011) மேற்கொள்ளப்படவுள்ள இந்தத் திருத்தம், ஆன்லைன் தளங்களில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதையும், நுகர்வோரின் முடிவெடுக்கும் அதிகாரத்தை மேம்படுத்துவதையும் முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்:

1. இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும் அனைத்துப் பொருட்களுக்கும், அது உற்பத்தி செய்யப்பட்ட நாட்டின் விவரங்களை வைத்துத் தேடும் (Searchable) மற்றும் வரிசைப்படுத்தும் (Sortable) வசதியை மின்-வணிக நிறுவனங்கள் கட்டாயம் வழங்க வேண்டும்.

2. நுகர்வோர் ஒரு பொருளின் விவரங்களைப் பார்க்கும்போது, அதன் உற்பத்தி நாட்டை எளிதில் அடையாளம் காண முடியும்.

3. ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும், பேக்கிங் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் இந்தக் கட்டாய விதி பொருந்தும்.

நுகர்வோருக்கு என்ன நன்மை?

இந்த புதிய அம்சம் நுகர்வோருக்குப் பல வழிகளில் நன்மையாக இருக்கும். ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் நுகர்வோர், ஒரு பொருளின் விலையை மட்டும் பார்க்காமல், அது எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்ற விவரத்தையும் தெரிந்துகொள்வதன் மூலம், சிந்தித்து முடிவெடுக்க முடியும்.

தற்போது ஒரு பொருளின் உற்பத்தி நாட்டைக் கண்டறிய ஒவ்வொரு பக்கமாகத் தேட வேண்டியுள்ளது. புதிய விதியின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்த நாடுகளின் அடிப்படையில் எளிதாக வரிசைப்படுத்தவும், கண்டறியவும் முடியும். இது தேடல் நேரத்தை வெகுவாகக் குறைக்கும்.

வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுவதால், டிஜிட்டல் சந்தைகளில் நுகர்வோரின் நம்பிக்கை மேலும் அதிகரிக்கும். மத்திய அரசின் இந்த முன்மொழிவு, 'ஆத்மநிர்பர் பாரத்' (Atmanirbhar Bharat - தற்சார்பு இந்தியா) மற்றும் 'வொக்கல் ஃபார் லோக்கல்' (Vocal for Local - உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு) ஆகிய முக்கிய முயற்சிகளுக்கு நேரடி ஆதரவை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அம்சத்தின் மூலம், 'இந்தியாவில் தயாரிக்கப்பட்ட' (Made in India) பொருட்கள் நுகர்வோரால் எளிதில் கண்டறியப்படும். உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு இணையாகச் சந்தையில் சமமான வெளிப்பாடு (Equal Visibility) கிடைப்பதை இது உறுதி செய்கிறது. நுகர்வோரை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மாற்றுப் பொருட்களைத் தேர்ந்தெடுக்க இது ஊக்கப்படுத்தும்.

அமலாக்கத்தை எளிதாக்குதல்

உற்பத்தி நாட்டின் வடிகட்டலை (Country of Origin Filter) அறிமுகப்படுத்துவதன் மூலம், விதிகள் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைச் சரிபார்க்கும் செயல்முறையும் அதிகாரிகளுக்கு எளிதாகும்.

ஒவ்வொரு பட்டியலையும் கைகளால் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல், விதிமீறல்களை எளிதில் கண்டறிந்து கண்காணிக்க இந்த அம்சம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

மத்திய நுகர்வோர் விவகாரத்துறை இந்த வரைவு சட்டத்திருத்த விதிகள் குறித்து, பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க நவம்பர் 22, 2025 வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.

இந்தக் கருத்துகளைப் பரிசீலித்த பின்னரே புதிய விதிகள் இறுதி செய்யப்பட்டு அமலுக்கு வரும்.

Hindusthan Samachar / JANAKI RAM