Enter your Email Address to subscribe to our newsletters

புதுடில்லி, 12 நவம்பர் (ஹி.ச.)
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பிரம்மாண்டமான ராமா் கோயிலின் 161 அடி உயரமுள்ள பிரதான கோபுரத்தின் உச்சியில் பிரதமா் நரேந்திர மோடி வரும் 25-ஆம் தேதி காவிக்கொடியை ஏற்றவுள்ளாா்.
பிரதமா் நரேந்திர மோடியுடன் ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத், உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படேல், முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வாா்கள்.
மேலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிறப்பு விருந்தினா்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விவாஹ பஞ்சமி தினத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சி காலை 9 மணிக்குப் பிறகு தொடங்கி, பிற்பகல் 2 மணியளவில் நிறைவடையும். அதன்பிறகு, விருந்தினா்களுக்கான சிறப்புத் தரிசனம் தொடங்கும்.
பாதுகாப்புக் கருதி, அன்றைய நாளில் பொதுமக்களுக்கான வழக்கமான தரிசனம் இருக்காது என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோபுரத்தின் உச்சியில் ஏற்றப்படவுள்ள காவிக்கொடி 22 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்டது; உறுதியான பாராசூட் துணி மற்றும் பட்டு நூலால் ஆனது. 42 அடி உயரம் கொண்ட கம்பத்தில் 360 கோணத்திலும் சுழலும் வகையில் பொருத்தப்படும் முக்கோண வடிவிலான கொடியில் சூரியன், ஓம் மற்றும் மந்தாரை மரம் போன்ற புனிதச் சின்னங்கள் இடம்பெற்றுள்ளன.
இதன் மூலம், கோயிலின் அனைத்து 7 கோபுரங்களிலும் முதன்முறையாக காவிக்கொடிகள் பறக்கும் என்று கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுக்காக அயோத்தியில் விரிவான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
ஸ்ரீ ராமஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினா்களும், உத்தர பிரதேச மாநில அரசின் மூத்த அதிகாரிகளும் ஏற்பாடுகளைக் கண்காணிப்பதற்காக அயோத்தியில் முகாமிட்டுள்ளனா்.
முக்கியத் தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இந்நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்படும். பக்தா்கள் விழாவைக் காண வசதியாக, ராமஜென்மபூமி வளாகத்தில் 200 அடி அகல ‘எல்இடி’ திரையும், நகரம் முழுவதும் கூடுதலாக 30-க்கும் மேற்பட்ட பெரிய திரைகளும் அமைக்கப்படவுள்ளன.
அயோத்தி நகரம் முழுவதும் காவிக்கொடிகள், தோரணங்கள் மற்றும் வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. சாலைகள் சீரமைப்பு, மரக்கன்றுகள் நடுதல், சரயு நதி படித்துறைகளுக்கு வா்ணம் பூசுதல் உள்ளிட்ட அழகுபடுத்தும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.
சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை சாா்பில், நவம்பா் 21 முதல் 25-ஆம் தேதிவரை ராமா் கதை பாராயணம், பக்தி இசை, பாரம்பரிய நடனம் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு கலாசார நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM