Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 12 நவம்பர் (ஹி.ச.)
அரிதான உலோகமான இரிடியத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், ரூ.1 கோடி தரப்படும் என தமிழகம் முழுதும் ரூ.ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்தது.
ரிசர்வ் வங்கி அளித்த புகாரை அடுத்து சென்னை சிபிசிஐடி போலீஸார் கடந்த செப்டம்பரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்தது போன்று போலி நிறுவனத்தை காட்டி, இரிடியம் விற்பனையில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மூன்று மாதத்தில் ரூ.1 கோடி லாபம் கிடைக்கும் என கூறி தமிழகம் முழுவதும் மோசடிக் கும்பல் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரிய வந்தது. இதில் முதல்கட்டமாக 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
அதனையடுத்து 15 மாவட்டங்களில் சிபிசிஐடி போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு செப்டம்பர் கடைசியில் மேலும் 32 பேரை கைது செய்தனர். மொத்தம் இதுவரை 52 பேரை கைது செய்துள்ளனர்
இந்நிலையில் ராமநாதபுரம் காட்டூரணி வைகை நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வட்டாட்சியர் ஜெயக்குமார், தன்னிடம் கரூர் வடக்கு காந்தி கிராமத்தைச் சேர்ந்த ராயன் என்ற சிற்றரசராயன்(64), மதுரை பேரையூர் தாலுகாவைச் சேர்ந்த சுந்தரம் மகன் அன்னக்கொடி(62) ஆகியோர் இரிடியம் மோசடியில் ஈடுபட்டதாக ராமநாதபுரம் சிபிசிஐடி போலீஸில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்து, சிற்றரசராயன் மற்றும் அன்னக்கொடி ஆகியோர் மேலும் பலரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளனரா? எத்தனை பேரிடம் மோசடி செய்துள்ளனர்
போன்றவற்றை அறிய போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர்.
அதன்படி, இன்று ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண்.2 நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்தி, 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தனர்.
அதனடிப்படையில் நீதித்துறை நடுவர் நிலவேஸ்வரன், சிற்றரசராயன் மற்றும் அன்னக்கொடி ஆகியோரை 2 நாட்கள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / ANANDHAN