Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 12 நவம்பர் (ஹி.ச.)
சிவகங்கையில் இருந்து சூரக்குடிக்கு தனியார் மினி பேருந்தை ஓட்டுநர் அலெக்ஸ் என்பவர் இன்று (நவ 12) இயக்கியுள்ளார். இப்பேருந்தில் ஏனாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 16) எனும் மாணவன் மற்றும் புதுப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த சூர்யா (வயது 18) ஆகிய இருவரும் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்துள்ளனர்.
சிவகங்கை ஆதம் பள்ளிவாசல் அருகே மினி பேருந்து சென்றுக் கொண்டிருந்தபோது முன்னால் சென்ற பள்ளி வேன் இடதுபுறம் உள்ள தெருவிற்குள் திரும்பியுள்ளது. அப்போது அதனை முந்தி செல்ல மினி பேருந்து முயன்றுள்ளது.
அச்சமயத்தில் பள்ளி வேனின் பின்புறம் மினி பேருந்தின் படிக்கட்டில் உரசியுள்ளது. இதன் காரணமாகப் படிக்கட்டில் பயணித்த சந்தோஷ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் உடல் நசுங்கி படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து அருகில் இருந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பேருந்தில் இருந்த பயணிகள், சந்தோஷ் மற்றும் சூர்யாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், சந்தோஷ் ஏற்கனவே உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகப் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் படுகாயம் அடைந்த சூர்யா மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த மாணவன் சந்தோஷ் சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
படுகாயமடைந்த சூர்யா சிவகங்கையில் பணிபுரிந்து வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b