Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 நவம்பர் (ஹி.ச.)
பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருதுக்கு தேர்வாகியிருக்கும் பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (நவ 12) எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பிரான்சு நாட்டின் மிக உயரிய 'செவாலியே விருது' தமிழ்த்திரையின் மூத்த கலை இயக்குநர் பேரன்பிற்குரிய ஐயா தோட்டா தரணி அவர்களுக்கு வழங்கப்பெறும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் அளிக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உருவான பலநூறு திரைப்படைப்புகளை தம் அளப்பரிய கலைத்திறனால்
செதுக்கிய மாபெரும் கலைஞனுக்கு செவாலியே விருது வழங்கப்படுவது மிகப்பொருத்தமானதாகும்.
தம்முடைய 12 வயது முதல் கலைப்பணிக்கு தம்மை , ஒப்புவித்து வாழ்ந்து வரும் திரைக்கலை நாயகன் ஐயா தோட்டா தரணி அவர்களின் சாதனை சிகரத்தில் மற்றுமொரு மணிவிளக்காய் செவாலியே விருது என்றென்றும் ஒளிரும்!
'உயர் பெருமைக்குரியவர்' என பொருள்படும் செவாலியே விருதினை பெறும் போற்றுதற்குரிய ஐயா தோட்டா தரணி அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b