Enter your Email Address to subscribe to our newsletters

பாட்னா, 12 நவம்பர் (ஹி.ச.)
பீகார் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்துள்ளது. முதல் கட்ட தேர்தலில் 66 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தது. இரண்டாம் கட்ட தேர்தலில் 69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனை தொடர்ந்து 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி என்பதே பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை இந்திய கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
நாங்கள் கருத்து கணிப்புகளால் மகிழ்ச்சியோ, வருத்தமோ அடைவதில்லை. இந்த கருத்துக்கணிப்புகள் அனைத்தும் வெறும் உளவியல் அழுத்தங்கள் மட்டுமே. இது அதிகாரிகளின் அழுத்தத்தால் நடத்தப்படுபவை.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவின் உத்தரவின் பேரில் நடந்துள்ளது. பிரதமரின் அலுவலகம் முடிவு செய்வதை, அமித் ஷா எழுதிக் கொடுப்பதை செய்தி நிறுவனங்கள் வெளியிடுகின்றன. கடந்த 2020 தேர்தலை ஒப்பிடுகையில், கூடுதலாக 72 லட்சம் மக்கள் வாக்களித்துள்ளனர். இது நிதீஷ் குமாரை மீண்டும் முதல்-மந்திரி ஆக்குவதற்கு அல்ல.
அரசாங்கத்தை மாற்றுவதற்காக போடப்பட்டது. இது மாற்றத்துக்கான வாக்குகள். அரசாங்க மாற்றம் ஏற்படப் போகிறது. 2-ம் கட்ட வாக்குப்பதிவில் கிட்டத்தட்ட 69 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.
வாக்கு எண்ணிக்கையைத் தாமதப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். மாவட்டத் தலைமையகத்தில் பதற்றத்தை உருவாக்குவார்கள். இதனால், மக்களிடையே பயம் உண்டாகும். 2020 தேர்தலிலும் மக்கள் மாற்றத்துக்காக தான் வாக்களித்தார்கள்.
ஆனால், முறைகேடுகள் செய்து, எங்களை வெறும் 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்கள். இந்த முறை நாங்கள் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம். இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b