Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 14 நவம்பர் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட அருங்குன்றம் ஊராட்சியில், மேல் கணக்கப்பட்டு, அருங்குன்றம், மண்ணவிடுதேவதை உள்ளிட்ட மூன்று வருவாய் கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 600 குடும்பத்திற்கும் மேல் வசித்து வருகின்றன.
இதில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா உள்ள நிலையில், 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வீட்டுமனை பட்டாவில் தவறான சர்வே எண், பெயர், ஊராட்சி பெயர் உள்ளிட்டவற்றில் தவறுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அருங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசு, கடந்த ஒரு வருட காலமாக மாவட்ட ஆட்சியர், வருவாய்த் துறை அலுவலர், வட்டாட்சியர் உட்பட துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், அதிகாரிகள் கவனத்தை ஈர்க்கும் வகையில், 200 பட்டாக்களை சரி செய்யும் வரை ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசு, கை இல்லாமல் சட்டை அணிந்து கிராம நிர்வாக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இது குறித்து பேசிய அருங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசு, “இதுபோன்று ஆடை அணிவது எனக்கு அசிங்கமாக தான் உள்ளது. அரசு அதிகாரிகள் முன்வந்து பட்டா பிழை திருத்தம் செய்து மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை இது போன்ற உடையுடன் தான் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வேன். எனது மக்களுக்கான சேவையை நான் முறையாக செய்ய முடியவில்லை என்பதற்காக இந்த ஆடையை அணிந்துள்ளேன்.
இது முழுக்க முழுக்க அரசின் கவனத்தை ஈர்க்க மட்டுமே. அரசின் குறைகளை சுட்டிக் காட்ட எங்களை வருத்திக் கொள்கிறோம். எனது மக்களுக்கு சேவை செய்வது அரசின் கடமை. ஆனால், அரசு அலட்சியமாக செயல்பட்டு வருகிறது.
அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத பட்சத்தில் வரும் நாட்களில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் என அனைவரும் இது போல் சட்டை அணிவோம். எனவே, அரசு அதிகாரிகள் உடனடியாக இதனை கருத்தில் கொண்டு எங்கள் மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக தீர்வு காண வேண்டும்” என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN