வங்கி விடுமுறையால் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 14 நவம்பர் (ஹி.ச.) சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் ஷில்பா சுரேஷ் என்ற மாணவி, கடந்த நவம்பர் 3 ம்தேதி நடத்தப்பட்ட இறுதி கலந்தாய்வில் மருத்துவ படிப்பிற்கு தேர்வாகி இருந்தார். அப்போது மருத்துவப்படிப்பில் சேர நவம்பர் 8 ம்
வங்கி விடுமுறையால் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவு


சென்னை, 14 நவம்பர் (ஹி.ச.)

சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் ஷில்பா சுரேஷ் என்ற மாணவி, கடந்த நவம்பர் 3 ம்தேதி நடத்தப்பட்ட இறுதி கலந்தாய்வில் மருத்துவ படிப்பிற்கு தேர்வாகி இருந்தார்.

அப்போது மருத்துவப்படிப்பில் சேர நவம்பர் 8 ம் தேதி கடைசி நாள் என்றும் அதற்குள் 15 லட்ச ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும் என தனியார் மருத்துவக் கல்லூரி தெரிவித்திருந்தது.

இதையடுத்து தன்னுடைய தாயாரின் தங்க நகைகளை அடகு வைத்து அதன் மூலம் கிடைத்த பணத்தை வங்கிக்கு எடுத்து சென்ற போது நவம்பர் 8 ம் தேதி அன்றைய தினம் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் வங்கி விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பணத்தை குறிப்பிட்ட தேதியில் செலுத்த முடியாமல், நவம்பர் 10 ம் தேதி கல்வி கட்டணத்தை செலுத்த தனியார் கல்லூரியிடம் அனுமதி கோரியுள்ளார்.

அதை ஏற்க மறுத்ததை எதிர்த்தும், மருத்துவ படிப்பில் சேர்க்க அனுமதிக்க முடியாது என கல்லூரி நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஷில்பா சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவி தரப்பில் வழக்கறிஞர் அபிஷா ஐசக், ஆஜராகி, மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான கட்டணத்தை கடைசி தேதியான நவம்பர் 8 ம் தேதி சென்ற போன்ற போது வங்கி விடுமுறை என்பதால் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதாகவும், மீண்டும் நவம்பர் 10 ம்தேதி பணத்தை செலுத்த சென்ற போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக செலுத்த முடியவில்லை என வாதம் வைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஆனந்த் வெங்கடேஷ், மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள அனுமதிக்கும் படி தனியார் கல்லூரியின் சேர்க்கை குழுவுக்கு உத்தரவிட்டு, நவம்பர் 14 ம் தேதிக்குள் கல்வி கட்டணத்தை செலுத்த மாணவிக்கு உத்தரவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b