டெல்லி கார் வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு பயங்கரவாதி என கண்டுபிடிப்பு
புதுடெல்லி, 14 நவம்பர் (ஹி.ச.) டெல்லியில் மக்கள் அதிகம் கூடும் செங்கோட்டை அருகே கடந்த 10-ந் தேதி இரவு கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் காயம் அடைந்தனர். இது திட்டமிட்ட பயங்கரவாத செயல் என கண்டறியப்பட்டு உள்ளது. நாட்
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு பயங்கரவாதி என கண்டுபிடிப்பு


புதுடெல்லி, 14 நவம்பர் (ஹி.ச.)

டெல்லியில் மக்கள் அதிகம் கூடும் செங்கோட்டை அருகே கடந்த 10-ந் தேதி இரவு கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் காயம் அடைந்தனர். இது திட்டமிட்ட பயங்கரவாத செயல் என கண்டறியப்பட்டு உள்ளது.

நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த சம்பவத்தை நிகழ்த்தியது டாக்டர் உமர் முகமது என்ற பயங்கரவாதி என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அவரது உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துபோனது. எனவே அவர்தான் காரை ஓட்டி வந்தாரா என சந்தேகம் ஏற்பட்டது. இருந்தாலும் டி.என்.ஏ. பரிசோதனையில் அதனை உறுதி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

உமர் முகமது ஜம்மு காஷ்மீர் புல்வாமாவைச் சேர்ந்தவர். அங்கு அவருடைய தாயார் மற்றும் சகோதரரிடம் டி.என்.ஏ. மாதிரிகள் பெறப்பட்டன.

அவை டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. கார் வெடித்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட உமரின் உடல் பாகங்கள் என்று சந்தேகம் கொள்ளப்பட்ட பாகங்களுடன் மேற்கண்ட மாதிரிகள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன.

இந்த பரிசோதனையில் இரண்டும் நூற்றுக்கு நூறு சதவீதம் பொருந்திப்போனது. சம்பவ இடத்தில் எடுக்கப்பட்டது உமருடைய உடல் பாகங்கள்தான் என கண்டறியப்பட்டது. இதனால் கார் வெடிப்பை நிகழ்த்தியது உமர்தான் என்பது உறுதியானது. இதுபற்றி மேலும் விசாரணை தொடர்கிறது.

இந்த நிலையில், டெல்லி கார் வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு பயங்கரவாதி என தற்போது தெரிய வந்துள்ளது.

அவர் ‘உகாசா’ என்ற சங்கேத பெயரில் அழைக்கப்படுகிறார். பிடிபட்ட அல்பலா பல்கலைக்கழக டாக்டர்களின் டைரி குறிப்புகளில் இருந்தும், விசாரணையிலும் இது கண்டறியப்பட்டு உள்ளது.

இந்தியாவில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற உகாசா தலைமையில் கடந்த 2022-ம் ஆண்டே சதித்திட்டம் தீட்டி இருக்கிறது.

இவரை சந்திப்பதற்காக உமர் முகமது கடந்த 2022-ம் ஆண்டு துருக்கி சென்று 2 வாரங்கள் தங்கியுள்ளார். இவருக்கு உகாசா, சதி வேலைகளுக்கு டிஜிட்டல் வழியை தவிர்த்து ரகசியமாக ஆட்களை அமர்த்துவது எப்படி, தொடர் தாக்குதல்களை நடத்துவது எப்படி என்பது பற்றியெல்லாம் பயிற்சி அளித்துள்ளார். கார்களில் சென்று தாக்குதல் நடத்துவதையும் கற்றுக்கொடுத்துள்ளார்.

இதன்பிறகு உமர் முகமது, நாடு திரும்பி, சதித்திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்ததாக விசாரணையில் தெரிய வந்து இருக்கிறது.

இந்த விசாரணை மேலும் தொடர்கிறது.

உகாசாவின் தடத்தை கண்டுபிடிக்க சர்வதேச புலனாய்வு அமைப்புகளின் உதவியை இந்திய அதிகாரிகள் நாடியுள்ளனர்.

Hindusthan Samachar / JANAKI RAM