Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 14 நவம்பர் (ஹி.ச.)
பிஹாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இந்த தேர்தலில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணியில் இணைந்து 61 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது.
பிற்பகல் 3 மணி நிலவரப்படி இக்கட்சி 3 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் 25 தொகுதிகளிலும், இடதுசாரி கட்சிகள் இரண்டு தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. மெகா கூட்டணி மொத்தம் 30 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
அதேநேரத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 206 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதில், பாஜக 95, ஜேடியு 82, லோக் ஜனசக்தி கட்சி
(ராம் விலாஸ்) 20, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 5, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 4 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.
தேர்தல் நிலவரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது,
நான் சந்தேகப்பட்டது நடந்துவிட்டது. சிறப்பு தீவிர திருத்தத்தில் 62 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. 20 லட்சம் பேர் சேர்க்கப்பட்டனர். அதில், 5 லட்சம் பேர், எஸ்ஐஆர் படிவத்தை நிரப்பாமலேயே சேர்க்கப்பட்டனர். நீக்கப்பட்ட வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகள், தலித்துகள் மற்றும் சிறபான்மையினர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சந்தேகத்துக்கு உரியதாகவே உள்ளது.
காங்கிரஸ் அதன் அமைப்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இன்றைய தேர்தல்கள் என்பது பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் பற்றியது அல்ல.
மாறாக அது, பூத் அளவிலான தீவிர மக்கள் தொடர்பு சார்ந்தது. வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு எனது வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b