Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 14 நவம்பர் (ஹி.ச.)
நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், மக்களின் கையில் உள்ள பணப்புழக்கத்தையும் வரி வசூலில் இருந்தே அளவிட்டுக் கொள்ளலாம்.
அதிலும் இந்த ஆண்டு பட்ஜெட்டின்போது குறைக்கப்பட்ட வருமான வரி, மக்களின் கையில் பணத்தை மிச்சம் வைக்க வழிகோரியது.
இது மட்டுமல்லாமல் ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் ஜி.எஸ்.டி. என்ற சரக்கு சேவை வரி எப்போது குறைக்கப்படும், அதற்கு பிறகு பொருட்கள் வாங்கினால் விலை குறைவாக இருக்குமே என்று கணக்கிட்டு காத்திருந்தனர்.
அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் 3-ந்தேதி டெல்லியில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநில நிதி மந்திரிகளும் கலந்துகொண்ட 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் 375 பொருட்களின் விலையை குறைக்கும் வகையில் வரி விகிதத்தில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை கொண்டு வரும் வகையிலான முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஜி.எஸ்.டி. வரம்பு 5, 12, 18, 28 என்ற 4 விகிதங்களில் இருந்தது. இதில் 12 சதவீதமும், 28 சதவீதமும் நீக்கப்பட்டு 2 விகிதங்களில் அதாவது 5 மற்றும் 18 சதவீதங்களில் இருக்கும்படி மாற்றியமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் 12 சதவீத வரிக்கு உட்பட்டிருந்த பொருட்களின் வரி 5 சதவீதமாகவும், 28 சதவீத வரம்புக்குள் இருந்த பொருட்களின் வரி 18 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.
இந்த மாற்றங்களெல்லாம் கடந்த செப்டம்பர் மாதம்
22-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. செப்டம்பர்
22-ந்தேதி முதல் அனைத்து பொருட்களும், குறிப்பாக துணிமணிகள், வீட்டு உபயோக பொருட்கள், மோட்டார் வாகனங்கள், மின்னணு பொருட்கள் போன்ற பல பொருட்களின் விற்பனை விஸ்வரூபம் எடுத்தது.
மருந்து பொருட்களின் விலை குறைந்தது, மாதந்தோறும் உயிர் காக்கும் மருந்துகளுக்காக பெருந்தொகையை செலவிட்டவர்களுக்கு நிம்மதி பெருமூச்சு விட வைத்தது. அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கான விலை குறைந்ததால் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் ஓரளவுக்கு மிச்சம் வருவதை அனைவரும் உணர்ந்தனர்.
கார்களின் விலை கணிசமாக குறைந்ததால் பல குடும்பங்களில் புதிதாக கார்களை வாங்கி மகிழ்ந்தனர். இது மட்டுமல்லாமல் இருசக்கர வாகன விற்பனையிலும் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தீபாவளி நேரத்தில் அனைத்து பொருட்களின் விலை குறைப்பையும் நன்கு அனுபவித்த மக்கள், தாங்கள் விரும்பிய பொருட்களை இதுதான் சமயம் என்று வாங்கி குவித்தனர். எலக்ட்ரானிக் பொருட்கள் மட்டுமே 25 சதவீதம் அதிகமாக விற்பனையானதே இதற்கு சாட்சி.
இது தவிர பால் பொருட்களின் விலை குறைந்ததும் குடும்ப தலைவிகளுக்கு சேமிப்பை கொடுத்தது. இதே போன்று பொருளாதாரத்துக்கு தூண்டுகோலாக இருந்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கும் உதவிக்கரம் நீட்டியது.
அந்த வகையில், கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்து 936 கோடி ஜி.எஸ்.டி. வசூல் ஆகி உள்ளது. இது கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது 4.6 சதவீதம் கூடுதல் ஆகும்.
தமிழகத்தில் ரூ.11 ஆயிரத்து 588 கோடி வசூலாகி உள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது ரூ.400 கோடி அதிகம்.
இதனால் குடும்பங்களிலும் மகிழ்ச்சி, அரசுக்கு பொருளாதாரத்திலும் வளர்ச்சி.
Hindusthan Samachar / JANAKI RAM