தமிழகத்தில் நவ.16 முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை, 14 நவம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் நவ.16 முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் மற
தமிழகத்தில் நவ.16 முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


சென்னை, 14 நவம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் நவ.16 முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்றும் (நவ.14), நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 16 முதல் 18-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும், 19-ம் தேதி பெரும்பாலான இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் 16-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும், 17-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், 18-ம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 19-ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் நாளை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 9 செமீ, நாலுமுக்கு, காக்காச்சி, மாஞ்சோலையில் தலா 7 செமீ, தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் 6 செமீ, தென்காசி மாவட்டம் அடவிநயினார் அணை, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், மூலைக்கரைப்பட்டியில் தலா 5 செமீ, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b