பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி இதுவரை ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லை
பாட்னா, 14 நவம்பர் (ஹி.ச.) பீகார் சட்டசபை தேர்தல் கடந்த 6 மற்றும் 11-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடந்தது. மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுதான் பீகாரில் அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும். இந்த நிலையில், 46 வாக்கு எண்ணிக்கை மையங்களில் இன்று வா
பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி இதுவரை ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லை


பாட்னா, 14 நவம்பர் (ஹி.ச.)

பீகார் சட்டசபை தேர்தல் கடந்த 6 மற்றும் 11-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடந்தது. மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுதான் பீகாரில் அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும். இந்த நிலையில், 46 வாக்கு எண்ணிக்கை மையங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனை தொடர்ந்து மற்ற வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

ஆரம்பத்தில் இருந்தே தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது.

ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியில் ( 10,957 வாக்குகள்) பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சதீஷ் குமார் 12,230 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார்.

இதை போல பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லை. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 238 தொகுதிகளில் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பீகார் தேர்தலில் நிதிஷ் குமாரின் கட்சி (ஐக்கிய ஜனதா தளம்) 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றால், அரசியலில் இருந்து விலகுவதாக பிரசாந்த் கிஷோர் பிரசாரம் ஒன்றில் கூறினார்.

இந்நிலையில், பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 83 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் முன்னிலை வகித்து வருகிறது.

இதன்மூலம் பிரசாந்த் கிஷோர் தான் கூறியதுபடியே அரசியல் பயணத்தில் இருந்து விலகுவாரா? அல்லது கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் கருத்துக்கணிப்புகளை மேற்கொள்வாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. எதுவாயினும் தேர்தல் முடிவுக்கு பின்னரே தெரியவரும்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டது.

ஆனால், இதெல்லாம் நம்ப முடியாதது, மகா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று அக்கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் கூறியிருந்த நிலையில், அவருக்கும் பீகார் தேர்தல் முடிவுகள் கடும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM