Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 நவம்பர் (ஹி.ச.)
சென்னையை சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் மைத்ரேயன் 1991 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.
இதையடுத்து 1999ஆம் ஆண்டு வரை அந்த கட்சியில் தொடர்ந்து பயணித்து வந்தார். இதையடுத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
2002 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பியாக தேர்வானார். தொடர்ந்து 3 முறை எம்.பி.யாக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டது. அப்போது ஓபிஎஸ் ஆதரவாளாக இருந்து வந்தார்.
இதையடுத்து 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண்சிங், தேசிய செயலாளர் சி.டி.ரவி, செய்தித் தொடர்பாளர் ஜாபர் இஸ்லாம் ஆகியோர் முன்னிலையில் மைத்ரேயன் பாஜகவில் இணைந்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மைத்ரேயன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
இதையடுத்து அவர் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததும் மைத்ரேயன் விலக காரணம் என சொல்லப்பட்டது.
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மைத்ரேயனுக்கு திமுக கல்வியாளர் அணி துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மைத்ரேயனுக்கு முன்பு திமுகவில் இணைந்த அன்வர் ராஜாவுக்கு திமுக இலக்கிய அணித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b