Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 நவம்பர் (ஹி.ச.)
மேகதாதுவில் அணை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
காவிரி ஆற்றின் குறுக்கே 67 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையை மேகதாதுவில் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை கர்நாடக அரசு தன்னிச்சையாகத் தயாரித்து, மத்திய நீர்வளக் குழுமத்துக்கு 2018-ல் சமர்ப்பித்ததை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இத்திட்டத்தை மேற்கொள்வதற்காகத் தேவைப்படும் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கைக்கான ஆய்வு வரம்புகளுக்கு ஒப்புதல் பெறுவதற்காக, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தை கர்நாடக அரசு கடந்த 2020-ம் ஆண்டு அணுகியபோது, மற்றொரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, தமிழக அரசு அதைத் தடுத்து நிறுத்தியது.
தொடர்ந்து, கர்நாடக அரசின் பட்ஜெட்டில் மேகதாது திட்டத்துக்கு ரூ.1,000 கோடியை ஒதுக்கியபோது, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அனுமதி அளிக்கக்கூடாது என்று மத்திய அரசு, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் 2022 மார்ச் 21-ல் தீர்மானம் நிறைவேற்றியது.
மேலும், பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின், 2022 மார்ச் 31, மே 26-ம் தேதிகளில் சந்தித்தபோது, மேகதாது திட்டத்துக்கு அனுமதியளிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். இந்த காலகட்டத்தில், காவிரி நீர்மேலாண்மை ஆணையத்துக்கு, கர்நாடக அரசின் கருத்துருவை பரிசீலிக்க அதிகாரம் உள்ளது என மத்திய அரசு தெரிவித்தது. இதை எதிர்த்து 2022 ஜூன் 7-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.
இவ்வாறு தமிழக அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளால் தற்போதுவரை காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படவில்லை. மேலும், தமிழக அரசு எடுத்த பல்வேறு தொடர் முயற்சிகளால், மேகேதாட்டு கருத்துருவை காவிரி நீர் மேலாண்மை ஆணையம், மத்திய நீர்வளக் குழுமத்துக்கு திருப்பியனுப்பியது.
இந்நிலையில், மேகதாது குறித்து பேசிய கர்நாடக முதல்வர், 2025-26-ல் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய நீரின் அளவை விட கூடுதலாக நீர் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேகதாது அணையால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ள கூற்று எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.
அதிக மழைப்பொழிவு இருக்கக்கூடிய ஆண்டுகளில் வேறுவழியின்றி தமிழகத்துக்கு கர்நாடக அரசு நீரைத் திறந்து விடுகிறதேயன்றி, வறட்சி ஆண்டுகளில் நமக்கு விகிதாச்சாரப்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவுக்கான நீர் வழங்கப்படுவது இல்லை. இந்நிலையில், இந்த அணை தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘மேகதாது அணை கட்டுவதை எதிர்க்கும் தமிழக அரசின் கருத்துகளை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய நீர்வளக் குழுமத்திடம் தெரிவிக்கலாம் என்றும், தமிழக அரசின் கருத்துகளைக் கேட்காமல் எந்தவொரு முடிவும் எடுக்கக்கூடாது என்றும் ஆணையிட்டுள்ளது.
அதன்படி, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமும், மத்திய நீர்வளக் குழுமத்தின் முன்பும் தமிழக அரசு தனது வலுவான வாதங்களை முன்வைக்க உள்ளது. இதற்கிடையே, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டதாக சில தவறான தகவல்கள் வெளிவருவது கண்டிக்கத்தது. இந்த தகவலில் எள்ளளவும் உண்மையில்லை.
காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் உரிமைகளை திமுக அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டு வதற்கான கர்நாடக அரசின் அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b