Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 நவம்பர் (ஹி.ச.)
பீகார் சட்டமன்றத் தேர்தலில் 203 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 203 தொகுதிகளை பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
இண்டியா கூட்டணி 37 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்!
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் அனைத்து சதித் திட்டங்களையும் பொய் பிரச்சாரங்களையும் தவிடுபொடியாக்கி, மகாத்மா புத்தர் ஞானம் பெற்ற பிஹார் மண்ணில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது தேசிய ஜனநாயகக் கூட்டணி.
கடந்த ஆட்சிக் காலத்தில் டபுள் இன்ஜின் சர்காராக நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசும், முதல்வர் திரு. நிதிஷ்குமார் அவர்கள் தலைமையிலான மாநில அரசும் வாரி வழங்கிய வளர்ச்சித் திட்டங்களைக் கண்டு மகிழ்ந்த பிஹார் மக்கள் இந்தத் தேர்தலின் போதும் மாபெரும் வெற்றியை நமக்குப் பரிசளித்திருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நேர்மைக்குக் கிடைத்த வெற்றி! அதிலும் மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. சிராக் பாஸ்வான் அவர்களின் முக்கியப் பங்களிப்பு பிஹார் கோட்டையில் நமது NDA-வின் வெற்றிக்கொடியை வலுப்படுத்தியுள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்றால் தேர்தல் ஆணையத்தைக் கொண்டாடுவதும், தேர்தலில் தோல்வியடையும் பொழுது அதே தேர்தல் ஆணையத்தைச் சாடுவதும்தான் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வாடிக்கையாகிவிட்டது. ஆனால், எவ்வித குறுக்கு வழியையும் பயன்படுத்தாமல் மக்கள் சேவையில் மட்டுமே தங்களை முன்னிறுத்தி மக்களின் பேராதரவுடன் வெற்றிப் பாதையில் வீறு நடைபோடும் பாஜக எனும் பெரும் சக்தியின் அடுத்த பயணம் தமிழகத்தை நோக்கியே!
ஆடத் தெரியாதவன் தெரு கோணல் என்று சொல்லும் கதையாக, மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்க முடியாத அரைகுறைகள் தான் தேர்தல் ஆணையத்தின் நேர்மையைக் குறை சொல்வார்கள். தேர்தல் ஆணையம் நடத்திய தேர்தலின் மூலம் கிடைத்த எம்பி மற்றும் எம்எல்ஏ உள்ளிட்ட பதவிகளில் அமர்ந்து கொண்டு அதே தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகக் கற்களை வீசும் ஆட்கள் செக்கிற்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாத ஜந்துக்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b