Enter your Email Address to subscribe to our newsletters

ரோம், 14 நவம்பர் (ஹி.ச.)
ஆர்க்டிக் மற்றும் அண்டார்ட்டிக் பிரதேசங்களில் உயரமான பகுதிகளில் ‘அரோரா’ என்ற அரிய இயற்கை நிகழ்வை காணமுடிகிறது.
இந்த ‘அரோரா’ நிகழ்வானது வடதுருவத்தில் காணப்படும்போது ‘அரோரா போரியாலிஸ்’(Aurora Borealis) எனவும், தென் துருவத்தில் காணப்படும்போது ‘அரோரா ஆஸ்ட்ராலிஸ்’(Aurora Australis) எனவும் அழைக்கப்படுகிறது.
இரவு வானத்தை ஒளிக்கதிர்களால் அலங்கரித்து, வர்ணஜாலம் காட்டும் இயற்கையின் அற்புதம்தான் ‘அரோரா’.
இந்த ‘அரோரா’ நிகழ்வு ஏற்படும்போது வானத்தில் வண்ண திரைச்சீலைகளால் அலங்கரித்ததுபோல், ஒளிக்கதிர்கள் சுருள் வடிவத்திலோ, அல்லது மினுமினுக்கும் ஒளி வடிவங்களாகவோ தோன்றுகின்றன. இவை சிவப்பு, பச்சை உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் காட்சியளிக்கின்றன.
இந்த ‘அரோரா’ நிகழ்வை ஆர்ட்டிக் பிரதேசத்தை ஒட்டிய வடதுருவ நாடுகளான நார்வே, சுவீடன், பின்லாந்து, ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, கனடா மற்றும் அலாஸ்கா உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக காணமுடியும்.
சுவீடன் நாட்டில் ‘அரோரா’ நிகழ்வு நல்ல செய்தியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. மேலும் வட அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் உயரமான பகுதிகளிலும் ‘அரோரா’ தென்படுகிறது.
இந்தியாவில் லடாக் உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் அரிதாகவே ‘அரோரா’ நிகழ்வை பார்க்க முடியும்.
இந்த நிலையில், இத்தாலியின் ஆஸ்டா பள்ளத்தாக்கில் உள்ள மேட்டர்ஹார்ன் மலைப்பகுதியில் இரவு வானத்தில் ‘அரோரா போரியாலிஸ்’ நிகழ்வு ஏற்பட்டது.
அப்போது வானம் செக்கச் சிவந்த வண்ணத்தில் காட்சியளித்தது. இதனை அங்குள்ள மக்கள் ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர்.
பொதுவாக சூரியனில் இருந்து வெளிப்படும் துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜன், ஆக்சிஜன் உள்ளிட்ட வாயுக்களுடன் மோதும் சமயத்தில் வானில் இத்தகைய அரிய நிகழ்வு ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM