Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 14 நவம்பர் (ஹி.ச.)
இந்திய ஜவுளிச் சங்கத்தின் தென்னிந்திய பிரிவு சார்பில் 78வது அகில இந்திய ஜவுளி மாநாடு, கோயம்புத்தூர் லீ மெரிடியன் ஹோட்டலில் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.
இது குறித்து கோயம்புத்தூர் காஸ்மோபாலிட்டன் கிளப்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் இந்த மாநாட்டுக் குழுத் தலைவர் மற்றும் சி.ஐ.டி.ஐ-யின் முன்னாள் தலைவர் ராஜ்குமார், இந்திய ஜவுளிச் சங்கத்தின் தென்னிந்திய பிரிவு தலைவர் சத்தியநாராயணா, மாநாட்டு அமைப்பாளர் ராமலிங்கம், மற்றும் இந்திய ஜவுளிச் சங்கத்தின் கோவை செயலாளர் சிவகுமார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் தெரிவித்ததாவது,
இந்த மாநாடு நவம்பர் 21 மற்றும் 22, 2025 ஆகிய இரண்டு நாட்கள், அமெரிக்கன் அசோசியேஷன் ஆஃப் டெக்ஸ்டைல் கெமிஸ்ட்ஸ் அண்ட் கலரிஸ்ட்ஸ் (AATCC) உடன் இணைந்து, 'உலகளாவிய ஜவுளி: வாய்ப்புகளைத் தோண்டி எடுத்தல்' என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில், ஆடைகள் மற்றும் ஜவுளி நுகர்வில் வளர்ந்து வரும் உலகளாவிய போக்குகள்; செலவு, கழிவு மேலாண்மை மற்றும் ஆற்றல் திறன் ஆகியவற்றிற்கான தொழில்நுட்பப் போக்குகள்; மேம்பட்ட உற்பத்தி முறைகள் மூலம் ஜவுளி ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள், பொருளாதாரம், வரிவிதிப்புக் கொள்கைகள் மற்றும் புதிய உற்பத்தி இடங்களின் சாத்தியக்கூறுகள்,ஜவுளித் துறையில் தகவல் தொழில்நுட்பம். ஆட்டோமேஷன்,ரோபோட்டிக்ஸ் ஆகியவற்றின் தாக்கம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தி முறைகள் போன்ற முக்கியமான தலைப்புகள் குறித்து விவாதிக்கப்படும்.
இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற பேச்சாளர்கள் மற்றும் வணிகத் தலைவர்களின் சிறப்புரைகள் மற்றும் குழு விவாதங்கள் மூலம் இந்தத் தலைப்புகள் ஆராயப்படும்.
இந்த மாநாட்டில் இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 600 பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றனர். அனைத்து முன்னணி இயந்திர உற்பத்தியாளர்கள், உபகரண வழங்குநர்கள், மற்றும் முன்னணி தொழிலதிபர்கள் ஆகியோர் இந்தத் தொழில் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகளைப் பற்றி விவாதிக்க உள்ளனர் என்று கூறினர்.
Hindusthan Samachar / V.srini Vasan