Enter your Email Address to subscribe to our newsletters

சபரிமலை, 14 நவம்பர் (ஹி.ச.)
கார்த்திகை முதல் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடக்கும் பூஜை சபரிமலையில் ஒரு மண்டல காலம் எனப்படுகிறது.
இந்தாண்டுக்கான மண்டல காலம் நவ., 17- துவங்குவதையொட்டி நாளை மறுநாள் (நவ., 16) மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
கடந்த ஓராண்டாக சபரிமலையில் தங்கி பூஜைகள் செய்து வந்த மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றிய பின் 18 படிகள் வழியாக சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்ப்பார்.
தொடர்ந்து 18 படிகள் அருகிலிருந்து புதிய மேல் சாந்திகளான சபரிமலை -பிரசாத் நம்பூதிரி மாளிகைப்புறம் மனு நம்பூதிரி ஆகியோரை ஸ்ரீ கோயில் முன் அழைத்து வருவார். அவர்கள் இருவருக்கும் பிரசாதம் வழங்கப்படும். பின் சிறிது நேரத்தில் இந்த மேல் சாந்திகளுக்கு தந்திரி மகேஷ் மோகனரரு அபிஷேகம் நடத்தி பதவி ஏற்க வைப்பார். அன்றிரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
நவ., 17 -அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்ததும் இந்தாண்டுக்கான மண்டல காலம் துவங்கும்.
நவ., 16 முதல் 2026 ஜன., 10 வரை ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் நவ., 29- வரை முன்பதிவு நிறைவு பெற்றுள்ளது. ஆன்லைன் முன்பதிவில் 70 ஆயிரம் பேரும் ஸ்பாட் புக்கிங்கில் 20 ஆயிரம் பேரும் தினமும் அனுமதிக்கப்படுகின்றனர்.
பக்தர்கள் தங்குவதற்கான அறை ஆன்லைனில் முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. https://www.onlinetdb.com என்ற இணையதளத்தில் பக்தர்கள் தங்க நினைக்கும் நாளிலிருந்து 15 நாட்கள் முன்னதாக நள்ளிரவு 12 மணி முதல் முன்பதிவு செய்ய முடியும். பக்தர்களுக்கான வசதிகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.
தேவசம் போர்டு தலைவர் பதவி ஏற்பு திருவிதாங்கூர் தேவசம் போர்டின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய தலைவராக கேரள அரசின் முன்னாள் தலைமைச் செயலர் கே. ஜெயக்குமார், உறுப்பினராக முன்னாள் அமைச்சர் ராஜு நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் நாளை திருவனந்தபுரத்தில் உள்ள திருவிதாங்கூர் தேவசம்போர்டு அலுவலகத்தில் பதவியேற்கின்றனர்.
Hindusthan Samachar / JANAKI RAM