Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 2 நவம்பர் (ஹி.ச.)
அகால மரணத்தைத் தழுவியவர்களின் ஆன்மா சாந்தியடையாமல் தங்களுக்கு நெருக்கமானவர்களைச் சுற்றியே திரியும் என்கிற நம்பிக்கை வெளிநாடுகளிலும் உண்டு. இந்த நம்பிக்கையின் பின்னணியில் உருவானதுதான் ஹாலோவீன் நாள்.
நம்மூரில் மயானக் கொள்ளை திருவிழாவில் காளி வேடம் தரித்தவர்கள், ஆக்ரோஷமான உடல்மொழியை வெளிப்படுத்தி அச்ச உணர்வை ஏற்படுத்துவார்கள். அதைப் போன்ற அனுபவத்துடன் கொஞ்சம் கேளிக்கையையும் கலந்து கொடுப்பதுதான் ஹாலோவீன்.
ஆர்ஜேடி நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் தனது பேரப்பிள்ளைகளுடன் ‘ஹாலோவீன்’ திருவிழாவைக் கொண்டாடியதை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. உ.பி.யில் நடந்த மகா கும்பமேளா நிகழ்வை ‘அர்த்தமற்றது’ என்று லாலு விமர்சித்ததை சுட்டிக்காட்டி லாலுவின் ‘ஹாலோவீன்’ கொண்டாட்டத்தை சாடியுள்ளது பாஜக.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 என இரு தினங்களில் நடக்கவிருக்கும் சூழலில் லாலுவின் ‘ஹாலோவீன்’ கொண்டாட்டமும், பாஜகவின் விமர்சனமும் கவனம் பெற்றுள்ளது.
லாலு யாதவின் மகள் ரோஹினி ஆச்சார்யா, தனது பிள்ளைகள் ஹாலோவீன் உடைகளில் இருக்கும் படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அதில் லாலு பிரசாத் யாதவும் இருந்தார். ரோஹினி அந்தப் படத்துடன் அனைவருக்கும் ஹாலோவீன் திருவிழா வாழ்த்துகள் என்று பதிவிட்டிருந்தார்.
இதனை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பாஜக விவசாய அணி, பிரிட்டிஷ் திருவிழாவைக் கொண்டாடுவதில் லாலு பிரசாத் யாதவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தது.
பிஹார் மக்களே, மறந்துவிடாதீர்கள். இதே லாலு பிரசாத் யாதவ் தான் சில நாட்களுக்கு முன்னர் மகா கும்ப மேளா என்ற மத நம்பிக்கை சார்ந்த விழாவை அர்த்தமற்றது என்றார். இப்போது பிரிட்டிஷ் ஹாலோவீன் திருவிழாவைக் கொண்டாடுகிறார். நம்பிக்கையை இழிவுபடுத்தும் யாருக்கும் பிஹாரிக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.” என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் கும்ப மேளா நடந்தபோது, லாலு பிரசாத் யாதவ், “கும்ப மேளாவுக்கு ஏதேனும் அர்த்தமிருக்கிறதா? அது பயனற்றது.
என்று கூறியிருந்தார்.
அப்போதே பாஜக இதற்கு கடும் எதிர்வினையாற்றியிருந்தார்.
இது ஆர்ஜேடியின் இந்து விரோதப் போக்கு என்று விமர்சித்திருந்தது நினைவு கூரத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM