Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 2 நவம்பர் (ஹி.ச.)
கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டியில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் அமலானது. ஜிஎஸ்டியில் இருந்த 4 வரி அடுக்குகள் தற்போது 2 அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது.
இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்துள்ளது. இதனால் மின்னணு சாதனங்கள் விற்பனை அதிகரித்து இருக்கிறது. இதற்கிடையே கடந்த அக்டோபர் மாதம் சரஸ்வதி பூஜை, தீபாவளி, சாத் பண்டிகை என வந்த வண்ணம் இருந்தது.
இந்த சூழலில், பண்டிகை கால தேவை அதிகரிப்பு மற்றும் ஜி.எஸ்.டி., குறைப்பு காரணமாக, கடந்த மாதம் கார் விற்பனை சாதனை உச்சத்தை எட்டியுள்ளது.
மாருதி சுசூகி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், ஸ்கோடா, கியா மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்களின் விற்பனை அபார வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் கார் விற்பனை ஐந்து லட்சம் என்ற எண்ணிக்கையை தாண்டியது.
மாருதி சுசூகியின் கார் விற்பனை கடந்தாண்டு அக்டோபருடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு அக்டோபரில் 20 சதவீதம் அதிகரித்து 2.42 லட்சமாக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி முதல் துவங்கிய 40 நாள் பண்டிகை காலத்தில், ஐந்து லட்சம் கார் புக்கிங் செய்யப்பட்டதாகவும் மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.
சில்லறை விற்பனையில் மாருதி 20% வளர்ச்சியைக் கண்டது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேவை இன்னும் அதிகரிக்கும் என வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் எதிர்பார்ப்புடன் இருக்கிறது.
இது குறித்து வாகன உற்பத்தியாளர்கள் கூறியதாவது:
ஜிஎஸ்டி வரி குறைப்புகளும், பண்டிகை கால தேவை காரணமாக, நாங்கள் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளோம்.
சந்தையில் தேவையையும் அதிக நுகர்வோர் ஆர்வத்தையும் கண்டோம். இந்த வேகத்தை விரைவுபடுத்த எதிர்பார்க்கிறோம். எதிர்காலத்தைப் பார்க்கும்போது, தொழில்கள் சிறப்பாக நடக்கும் என்று நம்புகிறோம்.
உலகளாவிய மின்னணு பாகங்கள் விநியோக இடையூறுகள் இன்னும் பெரிய அளவில் உள்ளன. இது எங்களுக்கு இதுவரை இல்லாத சிறந்த அக்டோபர் மாதமாக இருந்தது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / JANAKI RAM