Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 9 டிசம்பர் (ஹி.ச.)
ஆதார் கார்டு (aadhaar card) என்பது இந்தியர்களின் மிக முக்கியமான ஆவணமாகும். அதுவும் அரசு மற்றும் தனியார் வழங்கும் அனைத்து சேவைகளைப் பெறுவதற்கு இந்த ஆதார் அட்டை மிகவும் அவசியம் ஆகும்.
இப்படி அனைத்து தேவைகளுக்கும் பயன்படும் ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் எப்போதுமே அப்டேட்டாகவும் சரியாகவும் இருக்க வேண்டும். இல்லையெனில் நமக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கூட கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது.
அதே போல் ஆதார் கார்டு வைத்திருக்கும் பெரும்பாலான மக்கள் தங்களது ஆதார் கார்டில் சிறு வயதில் எடுத்த புகைப்படம் தான் இப்போது வரை இருக்கும். ஆனால் காலப்போக்கில் முகத்தில் ஏற்படும் மாற்றங்களால் பழைய ஆதார் புகைப்படத்தை புதியதாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
மேலும் பல முக்கிய பணிகளுக்கு ஆதார் அட்டை தேவைப்படுகிறது. பழைய ஆதார் புகைப்படத்தை வைத்து அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படலாம். எதிர்காலத்தில் இது போன்ற சிரமங்களைத் தவிர்க்க ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தைப் புதுப்பித்துக் கொள்வது நல்லது. அதாவது ஆதார் கார்டில் உள்ள பழைய புகைப்படத்தை புதியதாக மாற்ற விரும்பினால், அதற்கான எளிய வழிமுறைகள் உள்ளன.
அதாவது ஆதார் சேவை மையத்தில் புகைப்படம் புதுப்பிப்பதற்கு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் பதிவு செய்ய வேண்டும். இதற்கு முதலில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (UIDAI) செல்ல வேண்டும். அதில் கேட்கப்படும் விவரங்களை சரியாக நிரப்பி, உங்களுக்கு வசதியான ஒரு தேதியில் அப்பாயிண்ட்மெண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக நீங்கள் அப்பாயிண்ட்மெண்ட் பதிவு செய்யும்போதே அதற்கான ஆன்லைன் கட்டணத்தையும் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்திய பிறகு உங்களுக்கு ஒரு ரசீது கிடைக்கும் அந்த ரசீதை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து நீங்கள் அப்பாயிண்ட்மென்ட் எடுத்த தேதியில் ஆதார் சேவை மையத்துக்குச் செல்ல வேண்டும். அங்கு நீங்கள் பெற்ற ரசீதை காண்பித்து ஒரு டோக்கன் எண்ணைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அடுத்து உங்களுக்கான நேரம் வந்தவுடன் உங்கள் ஆதார் கார்டு சரிபார்க்கப்படும். அதன்பின்பு உங்கள் அழைத்து கைரேகை மற்றும் கண் விழித்திரை போன்ற தகவல்கள் பதிவு செய்யப்படும். அதன்பின்பு உங்கள் புதிய புகைப்படம் எடுக்கப்படும். இந்த புதிய புகைப்படம் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். இந்த செயல்முறை அனைத்தும் முடிந்த பிறகு சுமார் 30 நாட்களுக்குள் உங்கள் ஆதார் கார்டில் புதிய புகைப்படம் அப்டேட் செய்யப்படும்.
அதே போல் சமீபத்தில் ஆதார் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பு வெளியானது. அதாவது ஆதார் அட்டையில் நமது புகைப்படம், பெயர், முகவரி, ஆதார் எண் போன்ற முக்கிய தகவல்கள் அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் இனிமேல் ஆதாரின் அடையாளமே முற்றிலும் மாற இருக்கிறது. இனி ஆதார் அட்டையில் குறிப்பிட்ட நபரின் புகைப்படம் மற்றும் கியூ ஆர் கோடு மட்டுமே இடம்பெறும் வகையில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக இந்திய தனித்துவ அடையாள அமைப்பான யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஆதார் அட்டையில் வரும் இந்த மாற்றம் குறித்த தகவலை இந்திய தனித்துவ அடையாள அமைப்பின் தலைமை செயல் அதிகாரியான புவனேஷ் குமார் வெளியிட்டு இருக்கிறார்.
பொதுவாக நாம் சிம் கார்டு வாங்கும் போதும், ஹோட்டலில் சென்று தங்கும் போதும், போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் போதும் நமது ஆதார் அட்டையை அங்கே கொடுத்துச் சரிபார்ப்பு செய்து கொள்வது கட்டாயமாக இருக்கிறது.
எனவே இவ்வாறு நமது ஆதார் அட்டை நகல்களை சமர்ப்பிக்கும் போது சில மோசடியாளர்கள் கைகளில் அவை சிக்கி தவறான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே தான் டிசம்பர் மாதத்தில் இருந்து ஆதார் அட்டை புகைப்படம் + QR கோடு வடிவத்தில் மட்டுமே வழங்கும் திட்டத்தை UIDAI பரிசீலித்து வருகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM