Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 9 டிசம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த கோயில்களில் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயிலும் ஒன்று ஆகும். இந்த கோயிலைப் பொறுத்தவரை குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள பக்தர்கள் வந்து செல்லும் ஒரு முக்கிய கோயிலாக அமைந்துள்ளது.
சிவன் (தாணு) , விஷ்ணு (மால்) , பிரம்மா (அயன்) ஆகிய முப்பெரும் கடவுள்களும் சேர்ந்துள்ள இந்த தல மூர்த்தி தாணுமாலயன் என்றும் அழைக்கப்படுகிறார். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வருகிற 19-ந் தேதி நடைபெறவுள்ளது.
விழாவை முன்னிட்டு 18-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதிஹோமம், காலை 8 மணிக்கு நீலகண்ட விநாயகருக்கு அபிஷேகம், 10.30 மணிக்கு தாணுமாலயசாமிக்கு அபிஷேகம், 11.30 மணிக்கு உச்சகால தீபாராதனை, இரவு 7 மணிக்கு காலபைரவருக்கு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.
விழாவில் 19-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு ராமருக்கு அபிஷேகம், காலை 8 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பால், தயிர், களபம், சந்தனம், குங்குமம், விபூதி, மஞ்சள்பொடி, அரிசி மாவு, பன்னீர் என 16 வகையான பொருட்கள் அடங்கிய சோடச அபிஷேகம் நடைபெறுகிறது.
முன்னதாக கோவில் கலையரங்க மைதானத்தில் ஊர் பொது மக்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் அன்னதானம் நடைபெறுகிறது. மதியம் 1 மணிக்கு ஆஞ்சநேயருக்கு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு ராமபிரானுக்கு புஷ்பாபிஷேகம், இரவு 7 மணிக்கு ஆஞ்சநேயருக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு லட்சம் லட்டு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மேலும், அபிஷேக பொருட்கள், புஷ்பாபிஷேக மலர்கள், வஸ்திரங்கள், பிரசாத பைகள் ஆகியவற்றிற்கான உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நன்கொடை செலுத்துவோர் கோவில் அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி தலைமையில், கண்காணிப்பாளர் ஆனந்தன், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b