Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 9 டிசம்பர் (ஹி.ச.)
சென்னையில் இன்று நள்ளிரவு முதல் கண்டெய்னர் லாரிகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் வாகனத்தை இயக்குவோம் என்று அதிரடியாக அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக இந்த சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்,
லாரி உரிமையாளர்கள், மோட்டார் வெளிச்சம், ஆல் இந்தியா மோட்டார் சர்வீஸ் அமைப்புகள் சார்பில் புதிய வாகன சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும். எல்லை சோதனைச் சாவடிகளை அகற்ற வேண்டும்.
அதிக எடை ஏற்றும்போது விதிக்கப்படும் அபராதத்தை பொருட்களை அனுப்புபவரே ஏற்றுக்கொள்ளும்படி செய்ய வேண்டும். டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளோம்.
மத்திய அரசு எங்களுடைய ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை வேலைநிறுத்தம் தொடரும். சுமார் 13 துறைமுக சங்கங்கள், மோட்டார் வெளிச்சத்தில் உள்ள 75 சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். நாளை முதல் இந்தப் போாராட்டத்தில் மற்ற சங்கத்தினரும் இணைவார்கள்.
எங்களுடைய 9 கோரிக்கைகளை பரிசீலனை செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இதனால் நேரடியாக 5 லட்சம் குடும்பத்தினரும், மறைமுகமாக மோட்டார் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 45 லட்சம் முதல் 1 கோடி வரையிலான குடும்பத்தினரும் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது என்று தெரிவித்தனர்.
இதனிடையே கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஒருதரப்பினர் வாகன புதுப்பிப்பு கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் தங்கள் வாகனத்தை இயக்கும்போது வாகன ஓட்டுநர்களுக்கும், வாகனத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை காட்டுப்பள்ளி துறைமுக ஒப்பந்ததாரர்கள் கமிட்டியில் உள்ள 7 சங்கங்களை சேர்ந்தவர்கள் அதன் தலைவர் எம்எம் கோபி தலைமையில், தண்டையார்பேட்டை காவல் துறை இணை ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த எம்எம் கோபி, தமிழ்நாட்டில் 4 பிரிவுகளாக வாகன தரச்சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வை கண்டித்து சம்பந்தப்பட்ட துறையிடம் மனு அளித்துள்ளோம். மனுவிற்கு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக சிலர் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். சென்னை துறைமுகங்களில் இயக்கப்படும் வாகனங்களில் 20 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் 15 சதவிதம் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
எங்கள் அமைப்பில் உள்ள 7 சங்கங்களை சேர்ந்தவர்கள் யாரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதில்லை. மேலும் நாங்கள் வாகனங்களை இயக்கினால் தாக்குவோம் என சிலர் எங்கள் சங்கத்தினருக்கு மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து, எங்களுடைய வாகனங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி காவல் துறை ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்.
மேலும் இந்த புதுப்பிப்பு கட்டண விவகாரத்தில் அரசு முறையாக நடவடிக்கை எடுக்காவிட்டால், நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம் எனவும் அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN