Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 9 டிசம்பர் (ஹி.ச)
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க எடுக்க உள்ள நடவடிக்கை குறித்து தகவல் தெரிவிக்கும்படி, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அளித்த விண்ணப்பத்தை இரண்டு மாதங்களில் பரிசீலிக்க, மத்திய தகவல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க எடுக்க உள்ள நடவடிக்கை குறித்து தகவல் தெரிவிக்கும்படி, மத்திய தகவல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி த.வெ.க. வழக்கறிஞர் அணி சென்னை மண்டல இணை ஒருங்கிணைப்பாளர் ஆதித்ய சோழன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், 2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, பணப்பட்டுவாடா குறித்து புகார் அளிக்க கட்டணமில்லா தொலைப்பேசி எண் என்ன?, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த கட்சிகள், வேட்பாளர்கள் மீது எடுத்த நடவடிக்க என்ன?, பணப்பட்டுவாடா குறித்து புகார் தெரிவிக்க மொபைல் ஆப், இணையதள வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதா?, பணப்பட்டுவாடா தொடர்பாக கடந்த 50 ஆண்டுகளில் எத்தனை புகார்கள் பெறப்பட்டன என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்கள் கோரியதாகக் கூறப்பட்டுள்ளது.
இதில் இரு கேள்விகளுக்கு மட்டும் தேர்தல் ஆணைய பொது தகவல் அதிகாரி பதிலளித்தார். இதுசம்பந்தமான உத்தரவை எதிர்த்து, மத்திய தகவல் ஆணையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாவது மேல் முறையீட்டு விண்ணப்பத்தை தாக்கல் செய்த போதும், இதுவரை. பரிசீலிக்கப்படவில்லை. அந்த மேல் முறையீட்டு விண்ணப்பத்தை பரிசீலித்து தகவல் அளிக்கும்படி, மத்திய தகவல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, மனுதாரரின் மேல் முறையீட்டு மனு மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும். இரண்டு மாதங்களில் முடிவெடுக்காவிட்டால், மனுதாரர் இந்த வழக்கை புதுப்பித்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ