Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 9 டிசம்பர் (ஹி.ச.)
தினந்தோறும் அதிகாலை 3.50 மணியளவில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு புறப்பட்டு செல்லும்.
அந்த வகையில் இன்று அதிகாலை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சரியாக 3:50 மணியளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்வதற்கு தயாரானது. இந்த விமானத்தில் 284 பயணிகள்,12 விமான ஊழியர்கள் என மொத்தம் 296 பேர் இருந்தனர்.
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமானது ஓடுபாதையில் ஓடத் தொடங்கியதும், விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டுபிடித்துள்ளார். விமானத்தை தொடர்ந்து இயக்கினால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் என்பதால் ஓடுபாதையிலேயே விமானத்தை நிறுத்தினார்.
இது குறித்து உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கவே, இழுவை வாகனம் மூலம் விமானமானது விமான நடைமேடைக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
விமானம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்ட பின்னர், விமான கதவுகள் திறக்கப்பட்டு, விமான பாதுகாப்பு குழுவினர் மற்றும் விமான பொறியாளர்கள் குழுவினர் இயந்திர பழுதை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
விரைவில் பழுது சரிசெய்யப்படும் என்றும், விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு முயற்சிகளுக்கு பின்னரும் அந்த பழுதை உடனடியாக சரிசெய்ய முடியவில்லை.
எனவே விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு, பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு சென்னையில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் பழுது நீக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், முழுமையாக சரி செய்யப்பட்ட பின்பு நாளை (டிச. 10) அதிகாலை 1.30 மணி அளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு மற்றும் வருகை விமானங்கள் பலவும் ரத்து செய்யப்படுவதும், தாமதமாக இயக்கப்படுவதுமான சூழல் நிலவி வருகிறது. மேலும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பிரச்சினை காரணமாகவும், பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனால் விமான பயணக் கட்டணமானது கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எமிரேட்ஸ் விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறு விமான பயணிகளுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி
இருக்கிறது.
Hindusthan Samachar / ANANDHAN