Enter your Email Address to subscribe to our newsletters

பனாஜி, 9 டிசம்பர் (ஹி.ச.)
வடக்கு கோவாவின் அர்போரா பகுதியில் இயங்கி வந்த, 'பிர்ச் பை ரோமியோ லேன்' இரவு விடுதியில் கடந்த 6ம் தேதி நள்ளிரவு, 100க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.
அப்போது, முதல் தளத்தில் வேயப்பட்டிருந்த பனை ஓலை கூரைகளில் தீ விபத்து ஏற்பட்டது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள், உடனடியாக விடுதியில் இருந்து வெளியேற முயன்றனர். குறுகிய வாசல் என்பதால், அனைவராலும் ஒரே சமயத்தில் வெளியேற முடியவில்லை.
அதில், சிலர் தரைதளத்தில் இருந்த சமையலறையில் புகுந்தனர். இதற்கிடையே, கூரையில் பற்றிய தீ, விடுதியின் பல பகுதிகளுக்கு மளமளவென பரவியது. அப்பகுதியே புகைமண்டலமானது.
இதில், பலர் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில், விடுதி ஊழியர்கள் 20 பேரும், வாடிக்கையாளர்கள் ஐந்து பேரும் உயிரிழந்தனர்.
முதலில், விடுதியில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில், நடன நிகழ்ச்சியின் போது, மின்சார பட்டாசுகள் கொளுத்தப்பட்டதால், அதிலிருந்து புறப்பட்ட தீப்பொறி காரணமாக விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இதை தெரிவித்த நிலையில், கோவா முதல்வர் பிரமோத் சாவந்தும் உறுதிப்படுத்தி உள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நடன நிகழ்ச்சியில் மின்சார பட்டாசு கொளுத்தப்பட்டதால், தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இது குறித்து விசாரிக்க மாவட்ட நீதிபதி, காவல் துறை, தடயவியல், தீயணைப்பு மற்றும் அவசர சேவைகளின் உயர் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும்.
விதிகளை மீறி கேளிக்கை விடுதி இயங்கியது தெரியவந்ததை அடுத்து, முறைகேடாக அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வழக்கில் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த கோவா போலீசார், விடுதியின் தலைமை பொது மேலாளர் ராஜீவ் மோதக், பொது மேலாளர் விவேக் சிங், மதுபானக்கூட மேலாளர் ராஜீவ் சிங்கானியா, நுழைவுவாயில் மேலாளர் ரியான்ஷு தாக்குர் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
விபத்து நடந்ததை அடுத்து விடுதி உரிமையாளர்கள் கவுரவ் லுாத்ரா, சவுரப் லுாத்ரா ஆகியோர் தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து தப்பி சென்றனர்.
அவர்களை கைது செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கடந்த 2023ல் விடுதி செயல்பட அனுமதி வழங்கிய அப்போதைய அர்போரா பஞ்சாயத்து இயக்குநர் சித்தி துஷார் ஹர்லாங்கர், அப்போதைய மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் தலைவர் ஷாமிலோ மோன்டேரோ, அப்போதைய கிராம பஞ்சாயத்து செயலர் ரகுவீர் பாக்கர் ஆகியோரை கோவா அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM