Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 9 டிசம்பர் (ஹி.ச.)
இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை புதன்கிழமை (டிச.10) தொடங்கவுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க துணை வா்த்தக பிரதிநிதி ரிக் ஷ்விட்ஜொ் தலைமையிலான குழு மூன்று நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை இந்தியா வரவுள்ளது.
இந்தக் குழு மத்திய வா்த்தகத் துறைச் செயலரும் இந்திய பிரதிநியுமான ராஜேஷ் அகா்வால் தலைமையிலான குழுவைச் சந்தித்து இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவாா்த்தையை நடத்தவுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அதிகபட்சமாக 50 சதவீத வரியை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்ததால் இரு நாடுகளிடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த செப்டம்பா் 16-ஆம் தேதி இந்தப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்க அமெரிக்க குழு இந்தியா வந்தது.
அதைத் தொடா்ந்து, மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையிலான இந்திய குழு கடந்த செப்டம்பா் 22-ஆம் தேதி அமெரிக்கா சென்று பேச்சுவாா்த்தையில் பங்கேற்றது.
இரு தரப்பு வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக இதுவரை 6 சுற்று பேச்சுவாா்த்தைகள் நிறைவுற்றுள்ளன.
இரு நாடுகளிடையே தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ. 17,18,207 கோடி (191 பில்லியன் டாலா்) மதிப்பிலான இருதரப்பு வா்த்தகத்தை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ. 44,97,925 கோடி (500 பில்லியன் டாலா்) மதிப்புக்கு உயா்த்துவதை இந்த இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் இலக்காக கொண்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM