Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 9 டிசம்பர் (ஹி.ச.)
முருகப்பெருமானின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அமைந்துள்ள மலையின் மீதுள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இதன்படி தீபம் ஏற்றச்சென்றபோது அங்கு பிரச்சினை ஏற்பட்டது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே, நீதிபதியின் தீர்ப்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் பேசப்பட்டது.
இந்நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோருவது தொடர்பான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் இன்று (டிச 09) ஒப்படைக்கப்பட்டது.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக 120 எம்.பி.க்கள் கையெழுத்திட்டனர். திமுக, காங். கம்யூ. மற்றும் பிற மாநில கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் சபாநாயகரிடம் வழங்கினர்.
Hindusthan Samachar / vidya.b