மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 9 டிசம்பர் (ஹி.ச.) மணல் கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி மாவட்டம், கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், மணல் கொள்ளையர்களால் கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இது சம்பந்தமான வழக்க
Madras High Court


சென்னை, 9 டிசம்பர் (ஹி.ச.)

மணல் கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி மாவட்டம், கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், மணல் கொள்ளையர்களால் கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

இது சம்பந்தமான வழக்கு உள்ளிட்ட நான்கு வழக்குகளின் அடிப்படையில், அமலாக்கத்துறை, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

அந்த விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்கக் கோரி, தமிழக டிஜிபிக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.

ஆனால் காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், தாங்கள் அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய தமிழக டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி, அமலாக்கத்துறை சென்னை மண்டல உதவி இயக்குநர் கிராந்தி குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 'மத்திய - மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே மனுத்தாக்கல் செய்ய முடியும் என்ற நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல.

மேலும் மத்திய அரசின் கீழ் செயல்படும் விசாரணை அமைப்பான அமலாக்கத்துறை தகவல்களை பகிர்ந்த காரணத்திற்காக மட்டுமே, அது தொடர்பாக மாநில அரசு வழக்குப்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மணல் கொள்ளை தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் விதித்த தடையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், அமலாக்கத் துறையின் நடவடிக்கை சட்டப்படி தடை செய்யப்பட்டது.

தவறிழைக்கும் அமலாக்கத்துறை, தனது தவறை மறைக்க நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை கூறும் குற்றச்சாட்டுகள் யூகத்தின் அடிப்படையிலானவைதானே தவிர, அதற்கென நம்பகத்தன்மை எதுவும் இல்லை. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது மட்டுமன்றி, நீதித்துறையை கேலிக்கூத்தாக்கும் நடவடிக்கை' என பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், 'தமிழகத்தில் மணல் கொள்ளையை தடுக்க தமிழக அரசின் வருவாய் துறை, காவல்துறை, வனத்துறை, கனிமவளத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கக்கூடிய குற்றத்தில் மணல் கொள்ளை வராத நிலையில், அதுகுறித்து அமலாக்கத்துறை சோதனை நடத்தி, விசாரித்தது சட்டவிரோதமானது. இது சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டப் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம்' எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் பதில் மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN