ஜனவரி 16 முதல் 18 வரை சென்னையில் பன்னாட்டு புத்தக கண்காட்சி - அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
சென்னை, 9 டிசம்பர் (ஹி.ச.) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா (CIBF) - 2026-ன் இலச்சினையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார். ‘உலகைத் தமிழ
Anbil Mahesh


சென்னை, 9 டிசம்பர் (ஹி.ச.)

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா (CIBF) - 2026-ன் இலச்சினையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார்.

‘உலகைத் தமிழுக்கும், தமிழை உலகுக்கும்’ என்ற கொள்கையை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த இலச்சினை, புத்தகத் திருவிழாவின் அதிகாரப்பூர்வ துவக்கத்தையும், இலக்கிய மற்றும் வாசிப்பு பண்பாட்டை ஊக்குவிக்கும் தமிழ்நாட்டின் தொடர் அர்ப்பணிப்பையும் வலியுறுத்துகிறது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2026, தமிழ்நாட்டின் சர்வதேச இலக்கிய பரிமாற்றத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும். உலகின் 100 நாடுகளின் பங்கேற்பு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் மொழிபெயர்க்கப்படுதல் என்ற மிகப்பெரிய இலக்குகளை எட்டும் முயற்சியாக இந்த பன்னாட்டுப் புத்தகத் திருவிழா அமைகிறது. இந்த புத்தகத் திருவிழா நான்காவது பதிப்பாக நடைபெறுகிறது.

சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா வரும் ஜனவரி 16 முதல் 18-ம் தேதி வரை சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. பன்னாட்டுப் புத்தகத் திருவிழா பள்ளிக் கல்வித் துறையின் முன் முயற்சியில், பொது நூலக இயக்குநரகம் மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் இணைந்து நடத்துகின்றன.

சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா சர்வதேச அளவிலான கருத்தரங்குகள், புத்தகக் காப்புரிமை வர்த்தகங்கள் மற்றும் இலக்கிய மேடைகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு தனித்துவமான B2B தளம் ஆகும். பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், இலக்கிய முகவர்கள் நேரடியாக கலந்துரையாடி புத்தகக் காப்புரிமை பரிமாற்றங்கள் மற்றும் கலாச்சார இலக்கிய பரிமாற்றங்களை மேற்கொள்ளும் வாய்ப்பை இந்த புத்தகத் திருவிழா உருவாக்குகிறது.

2023-ல் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 24 நாடுகளைக் கொண்டு தொடங்கப்பட்டது. இந்த முயற்சி, 2024-ல் 40 நாடுகள் 39 மொழிகளுடன், 2025-ல் 64 நாடுகள் மற்றும் 81 மொழிகளுடன் விரிவடைந்தது. 2026-ம் ஆண்டு முதல் முறையாக, இந்த B2B தளம் பொதுமக்கள் பங்கேற்கும் திறந்த தளமாக மாற்றப்படுகின்றது. இதன் மூலம் தமிழ்நாட்டுப் பதிப்பாளர்கள் உலக வாசகர்களை நேரடியாகச் சந்திக்கும் வரலாற்றுச் சந்தர்ப்பம் உருவாகிறது.

மூன்று ஆண்டுகளில் 110 தமிழ் எழுத்தாளர்களின் 185 நூல்கள், 26 மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியத்தை சர்வதேச அரங்கில் புத்தம் புதிய சிறந்த நோக்கோடு, நிலைப்படுத்துவதே 2026 சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆண்டில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பங்கேற்பதற்கு விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு வரை சென்னை வர்த்தக மையத்தில் பன்னாட்டு புத்தக கண்காட்சி நடத்தப்பட்டது. இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் இலக்கிய அலுவலர்கள் சென்னையின் மையப் பகுதியில் நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து கலைவாணர் அரங்கில் நடத்தப்படுகிறது.

சென்னை பன்னாட்டு புத்தக கண்காட்சி இலக்கியங்களை உலக அளவில் கொண்டு செல்வதற்காக நடத்தப்படுகிறது. எனவே இதனை சென்னையில் நடத்துகிறோம்.

வரும் ஆண்டுகளில் அதிக அளவில் நாடுகள் பங்கேற்கும் போது தமிழ்நாட்டின் பிற இரண்டாம் நிலை நகரங்களில் நடத்தவும் ஆலோசிப்போம். நடப்பாண்டில் 120-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட உள்ளன என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN