Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 9 டிசம்பர் (ஹி.ச.)
2025ம் ஆண்டிற்கான தமிழக அரசின் ”சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ”சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் முதலமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார்.
2025 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் ”சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம்.
தங்களது விண்ணப்பம் தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.
2025 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் சென்னை மாவட்ட ஆட்சியருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 18.12.2025 ஆகும்.
விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி: மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், 2-வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சென்னை-600001.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b