Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 9 டிசம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தற்போதே பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. அந்த வகையில் தவெக என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். ஏற்கனவே திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்தடுத்த வாரங்களில் பொதுமக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் மக்களை சந்தித்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து தவெக தேர்தல் பிரச்சாரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், விஜய் மீண்டும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த நவம்பர்
23-ம் தேதி தொடங்கினார். இதனைத்தொடர்ந்து இன்று அவர் புதுச்சேரியில் பொதுப் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இன்று காலை 10 மணியில் இருந்து 12 மணி வரை மக்களை சந்திக்க லிஜய்க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி தவெக மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு 5000 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இருந்து யாருக்கும் அனுமதி இல்லை என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு விஜய் நடத்தும் முதல் திறந்தவெளி பொதுக்கூட்டம் என்பதால் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று தவெக கூட்டத்திற்கு வருபவர்களை போலீசார் சோதனை செய்த நிலையில், ஒருவர் கைத்துப்பாக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக அவரை கைது செய்து காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் ஒதியன் சாலை காவல் நிலையத்திற்கு அவரை அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
இதேபோல் தவெக பிரச்சார கூட்டத்திற்கு வருபவர்களிடம் அனுமதி அட்டை (பாஸ்) குறித்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் போலீசாரை ஒருமையில் பேசி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். முன்னதாக தவெக பொதுக்கூட்டத்திற்கு வருபவர்களிடம் மொரட்டாண்டி சோதனைச்சாவடி அருகே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கர்நாடகா பதிவு எண் கொண்ட வாகனம் நூற்றுக்கும் மேற்பட்ட தவெக கொடியுடன் வந்தது. அந்த வாகனத்தில் இருந்த இரண்டு நபர்களை போலீசார் எச்சரிக்கை விடுத்து கொடியை பறிமுதல் செய்து அனுப்பி வைத்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN