Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 9 டிசம்பர் (ஹி.ச.)
தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கட்சியின் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் சம்பவத்துக்குப் பிறகு கடந்த மாதம் காஞ்சீபுரத்தில் ஒரு தனியார் கல்லூரியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டு பேசினார்.
அதற்கு அடுத்தபடியாக புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டதையடுத்து த.வெ.க. தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.
இந்த நிலையில் உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால் கியூ.ஆர். கோடுடன் கூடிய பாஸ் வழங்கப்பட்டு கூட்டத்தில் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த பாஸ் வழங்க கூடாது என போலீஸ் தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதன்படி புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 12 மணிவரை பொதுக்கூட்டம் நடத்திட போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
கூட்டத்தில் பங்கேற்பவர்களின் குடிநீர் தேவைக்காக தலா 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தொட்டிகள் 20 இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கூட்டத்தில் பங்கேற்பதற்காக பனையூரில் உள்ள வீட்டில் இருந்து இன்று காலை 8 மணிக்கு விஜய் காரில் புறப்படுகிறார். அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக காலை 10.30 மணிக்கு உப்பளம் ஹெலிபேடு மைதானத்துக்கு வருகிறார். அங்கு விஜய் தனது பிரசார வாகனத்தில் நின்றபடியே பேசுகிறார். விஜய் பேச்சை கேட்க வரும் தொண்டர்கள் ‘பாஸ்’ வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில் த.வெ.க. கட்சி சார்பில் தொண்டர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கட்சியின் தலைவர் விஜய் உத்தரவின்பேரில், த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொதுக்கூட்டத்திற்கு கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியோர்கள், உடல் நலம் குன்றியோர், பள்ளி சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்துகொள்ள அனுமதி இல்லை. தலைவர் விஜய் நிகழ்ச்சிக்கு வரும் போதும், கூட்டத்தை முடித்து விட்டுச் செல்லும் போதும் அவரது வாகனத்தை பின்தொடரக்கூடாது. ஐகோர்ட்டு உத்தரவின்படி தேசிய நெடுஞ்சாலைகள், பிற சாலைகளில் கட்-அவுட், பேனர் மற்றும் அலங்கார வளைவுகள், கொடி கட்டப்பட்ட கம்பிகளை அனுமதி இல்லாமல் வைக்கக்கூடாது. பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிகளில் அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள், காம்பவுண்டு சுவர்கள், மரங்கள், வாகனங்கள், கொடிக் கம்பங்கள் மீது ஏறக்கூடாது. மின் விளக்கு கம்பங்கள், மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் அருகில் செல்லக்கூடாது.
பொதுக்கூட்டத்தின்போது அந்த பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது உள்ளிட்ட 11 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பொதுக்கூட்டம் நடைபெறும் உப்பளம் பகுதியில், பாதுகாப்பு கருதி அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியான மத்தியாஸ் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெத்தி செமினார் தொடக்கப்பள்ளி ஆகியவற்றுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விடுமுறை விடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM