முழு கொள்ளளவை எட்டிய புழல் ஏரி - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சென்னை, 9 டிசம்பர் (ஹி.ச.) கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்கத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், சென்னை, திருவள்ளூருக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. சோழவரம், செங்குன்றம், புழல்,பொன்னேரி உள்ளிட்ட பகுதிகள
முழு கொள்ளளவை எட்டிய புழல் ஏரி - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


சென்னை, 9 டிசம்பர் (ஹி.ச.)

கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்கத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.

இதனால், சென்னை, திருவள்ளூருக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. சோழவரம், செங்குன்றம், புழல்,பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழையின் காரணமாக அணைகளில் நீர்வரத்து அதிகரித்தது.

தற்போது, புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் திறப்பு 100 கன அடியில் இருந்து 300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 3300 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.

21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் 21.2 அடியை எட்டி நிரம்பி உள்ளது. புழல் ஏரிக்கு நேற்று 470 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 640 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் புழல் ஏரி உபரிநீர் கால்வாய் ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டியது. பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியை எட்டியது.

ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு திறக்கப்படும் உபரி நீர் அளவு 100 கன அடியில் இருந்து 300 கன அடியாக அதிகரிப்பு.

ஏரியின் மொத்த அடி உயரமான 35 அடியை நீர்மட்டம் எட்டிய நிலையில், மெட்ரோ குடிநீர் தேவைக்காக 17 கன அடி திறக்கப்பட்டு வருகிறது.

Hindusthan Samachar / vidya.b