Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 9 டிசம்பர் (ஹி.ச)
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தைலாபுரம் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தேர்தல் ஆணையத்தை எதிர்த்துத் தாங்கள் வழக்குத் தொடுத்ததாகவும், ஆனால் தானாகவே முன் வந்து பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் அன்புமணி தரப்பு ஆஜராகி வாதிட்டார்கள் என்றும் தெரிவித்தார். இந்த வழக்கின் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக வந்துள்ளதாகவும், பாமகவைத் தான் உருவாக்கியதாகவும், எனவே கட்சியின் பெயரைச் சொல்லவோ, சொந்தம் கொண்டாடவோ யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
மேலும், சொந்த தந்தையே எதிர்க்கும் இப்படிப்பட்ட ஒரு தலைவர் தமிழ்நாட்டில் பிறந்துள்ளாரே என்று பலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள், என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார். ஒட்டுக் கேட்கும் கருவி வைத்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
அன்புமணியைக் குறிப்பிட்டுப் பேசிய ராமதாஸ்,
நீ வேண்டுமானால் தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்துக்கொள் என நான் பலமுறை அவரிடம் சொல்லிவிட்டேன். என் பெயரை, என் புகைப்படத்தை அவர் பயன்படுத்தக் கூடாது என உறுதியாகச் சொல்லி கொள்கிறேன்.
பாமகவிற்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கட்சியை ஆரம்பி அல்லது வேறு கட்சியில் இணைந்துகொள். ஒவ்வொரு நாளும் பொய் பேசிக்கொண்டிருக்கிறார். எல்லாவற்றையும் அனுபவித்துவிட்ட உனக்கு எதற்கு கட்சி? என்று காட்டமாகத் தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN