ஆர் எஸ் எஸ் பற்றி தெரிந்து கொள்ள மக்கள் விக்கி பீடியாவை நாடுகின்றனர் - ஆர் எஸ் எஸ் தலைவர்மோகன் பகவத் பேச்சு!
சென்னை, 9 டிசம்பர் (ஹி.ச.) ஆர் எஸ் எஸ் நூற்றாண்டையொட்டி, நாடு முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஆர் எஸ் எஸ் அமைப்பு நடத்தி வருகிறது. டில்லி,மும்பை உள்ளிட்ட நகரங்களில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில், மோகன் பகவத் பங்கேற்றார். அதன் தொடர்ச்சியாக,
மோகன் பகவத்மோகன் பகவத்


சென்னை, 9 டிசம்பர் (ஹி.ச.)

ஆர் எஸ் எஸ் நூற்றாண்டையொட்டி, நாடு முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஆர் எஸ் எஸ் அமைப்பு நடத்தி வருகிறது.

டில்லி,மும்பை உள்ளிட்ட நகரங்களில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில், மோகன் பகவத் பங்கேற்றார்.

அதன் தொடர்ச்சியாக, சென்னை, திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடக்கும் இளைஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது:

ஆர்எஸ்எஸ் இயக்கப்பணி 100 ஆண்டுகளை கடந்துள்ளது. இத்தனை நாட்கள் இந்த இயக்கம் என்ன செய்துள்ளது என்பது மக்களுக்கு பெருமளவு தெரியவில்லை.

ஆர்எஸ்எஸ் பற்றி தெரிந்து கொள்ள மக்கள் விக்கிபீடியாவை நாடுகின்றனர். அதில் இருக்கும் தகவல்கள் முற்றிலும் உண்மையில்லை. அமைப்பின் பணிகள் குறித்து மக்கள் நேரடியாக அறிந்து கொள்ள வேண்டும். உண்மையை மக்கள் அறிய வேண்டும் என எண்ணுகிறேன். மக்கள் நேரடியாக அமைப்பை பற்றி புரிந்து கொள்வது அவசியம்.

அமைப்பின் நூற்றாண்டு பயணம் பற்றி நான்கு இடங்களில் விளக்க உரை நடக்க உள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு யாரும் போட்டியாளர்கள் கிடையாது. நாட்டை முன்னேற்றுவதற்காகவே இயங்குகிறது. அதுவே இந்த அமைப்பின் அடிப்படை கொள்கை.

கூட்டத்தின் துவக்கம், முடிவில் பாரத அன்னையை வணங்குகிறோம். ஆர்எஸ்எஸ் நிறுவன தலைவர் ஹெட்கேவாரும் இதனை கற்றுத் தந்தார். அவர் நாக்பூரில் 10ம் வகுப்பு படித்த போது வந்தே மாதரம் எனக் கூறினார். வந்தே மாதரம் வார்த்தையை உச்சரிக்க ஆங்கிலேய அரசு தடை விதித்தது.

வந்தே மாதரம் சொல்பவர்கள் மன்னிப்பு கேட்கும் சூழல் நிலவியது. நம் தாய் நாட்டை வணங்க நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஹெட்கேவார் கேள்வி எழுப்பினார். உடனே அவரை வேறு பள்ளிக்கு மாற்றினர். அங்கும் இதே நிலை நீடித்தது. பின் கோல்கட்டா சென்று படித்தார்.

ராஜஸ்தான் முதல் தெலுங்கானா வரை ஒரு இயக்கத்தை வழிநடத்தினார். கோல்கட்டாவில் மருத்துவ பட்டம் பெற்ற அவர் ஆங்கிலேயர்களிடம் பணியாற்ற மறுத்தார். தாய்நாட்டுக்கு பணியாற்றவே விரும்பினார்.

பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து தாய்நாட்டுக்கு சேவை செய்ய ஹெட்கேவார் விரும்பினார். அப்போதைய காங்கிரஸ் இயக்க போராட்டங்களில் பங்கேற்றார். ஆங்கிலேய அரசின் ஒடுக்கு முறைகளை எதிர்த்து வாதிட்டார். பிரிட்டிஷ் சட்டத்தை பாரதத்தில் பயன்படுத்துவது தவறு என்றார்.

நான் எந்த தவறும் செய்யாதபோது கைது ஆவதை ஏற்க முடியாது என்றார்.

ஆனால், அவருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சுதந்திர போராட்டத்திலும் சமூக சீர்திருத்தத்திலும் முக்கிய பங்காற்றினார். நம் நாட்டை ஆட்சி செய்ய பிரிட்டிஷார் யார் என்று கேள்வி எழுப்பினார். மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த அப்போதைய காங்கிரஸ் பயன்படுத்தப்பட்டது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த ராட்டை சுழற்றப்பட்டது.

நம் மக்களை அடிமையாக்கும் பல விஷயங்களை எதிர்த்தோம். விடுதலையும் சமத்துவமும் மிக மிக முக்கியம். இந்த நாட்டில் ஏதோ ஒரு விஷயம் செய்ய வேண்டியிருந்தது. இதனையே மஹாத்மா காந்தி, தாகூர், நேதாஜி ஆகியோர் கூறினர்.

பல ஆண்டு பரிசோதனைக்கு பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பை ஹெட்கேவார் நிறுவினார். சிஸ்டம் சரியானால் சமூகம் சரியாகும் எனஅவர் நம்பினார். தனி மனித மாற்றத்துக்கு சமூக பொறுப்பு அவசியம். சமூக மாற்றம் ஏற்பட்டால் தான் நன்மை விளையும் என நம்பினார். பல மொழிகள் கலாசாரம் உள்ள இந்நாட்டு மக்களை எப்படி ஒருங்கிணைப்பது என அவர் சிந்தித்தார். பல வேறுபாடுகள் இருப்பினும், நம் அனைவருக்குமான நாடு ஒன்று.

நேஷன், ஸ்டேட் என்ற வார்த்தை மேற்கத்திய பாணியை சேர்ந்தது. ராஷ்டிரம் என்பதே நாம் பயன்படுத்தும் சொல். நம் பாரதம் சனாதன தேசம். இந்த பூமியை மாபெரும் சக்ரவர்த்திகள் ஆண்டுள்ளனர். ஆங்கிலேயர் கூறியதுபோல் மாநிலங்கள் சேர்க்கையால் உருவானது அல்ல இந்த தேசம்.

வேற்றுமையில் ஒற்றுமையே நம் நாட்டின் மகத்துவம். இப்படிப்பட்ட தேசத்தை தான் இன்று ஹிந்துதேசம் என்கிறோம். பாரதம், இந்தியா போன்றவை ஒரே பொருள் தருபவை. இந்த மாபெரும் சமூகத்தை ஒருங்கிணைப்பது அவசியம்.

இன்று நான்கு வகை ஹிந்துக்கள் உள்ளனர். ஒரு சிலர் ஹிந்து என்பதில் பெருமை கொள்கின்றனர். சிலர் அதில் என்ன இருக்கிறது என்கின்றனர். சிலர் அதை சொல்லவே தயங்குகின்றனர். சிலர் தாங்கள் ஹிந்துக்கள் என்பதையே மறந்துவிட்டனர். யாரெல்லாம் ஹிந்துக்கள் என அழைக்கப்படுகிறார்களே அவர்களை ஒருங்கிணைப்பது அவசியம்

பாரதத்தின் மீதான பக்தி, முன்னோர் மீதான பக்தி கலாசாரத்தை போற்ற வேண்டும். அதுவே நம் தர்மம். நமது கலாசாரம் என்பது கங்கையை போன்றது தடையின்றி தொடர்ந்து பயணிப்பது. ஆர்எஸ்எஸ் என்பது மக்களை ஒருங்கிணைக்கும் சக்தி பெற்ற அமைப்பாகும். இந்த இயக்கம் தனி மனித ஒழுக்கத்தை மேம்படுத்துகிறது.

நல்ல மனிதர்களை உருவாக்குவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய குறிக்கோள். நாங்கள் ஹிந்துக்களை விழிப்புணர்வு அடைய செய்கிறோம். ஒரே நாடு என்ற எண்ணத்தை அறியச் செய்கிறோம். ஆர்எஸ்எஸ் அமைப்பு துவங்கப்பட்ட போது எந்தவித பொருள் உதவியோ ஊடக உதவியோ கிடைத்தது இல்லை.

ஆங்கிலேய அரசும் இந்த அமைப்புக்கு எதிராகவே செயல்பட்டது. பிரிவினைகளை உடைத்து ஒரே நாடு ஒரே மக்கள் என்பதை நிலைநாட்டுவதே கொள்கையாக இருந்தது.

ஆர் எஸ்.எஸ் 100 ஆண்டுகள் கடந்த நிலையில் நமக்கான கடமை அதிகரித்துள்ளது. மக்களை ஒருங்கிணைப்பதும் சங்கத்தை விரிவுபடுத்துவதும் நம் கடமையாக உள்ளது.

ஒவ்வொரு 10 ஆயிரம் பேரிலும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் ஒருவர் இருக்க வேண்டும். அனைத்து சமூக மக்கள் இடையேயும் அமைப்பை கொண்டு செல்ல வேண்டும். நல்ல மனிதர்களை ஒருங்கிணைக்க வேண்டும். அனைத்து தரப்பின் மத்தியிலும் நம் அமைப்பினர் இருக்க வேண்டும். நல்ல மனிதர்களின் சேர்க்கை லட்சியத்தை அடைய உதவும்

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு யாரும் போட்டியாளர்கள் கிடையாது. நாட்டை முன்னேற்றுவதற்காகவே இயங்குகிறது. அதுவே அமைப்பின் அடிப்படை கொள்கை.

இவ்வாறு ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார்.

Hindusthan Samachar / Durai.J