Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 9 டிசம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் பிரசார வாகனத்தில் சென்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு,கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் பலியானதற்கு பின்னர் அது போன்ற பிரச்சாரங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
தமிழகம் போல் புதுச்சேரியிலும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில், புதுச்சேரி உப்பளம் மைதானத்தில், வாகனத்தில் நின்று பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி, இன்று (டிச 09) புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
புதுச்சேரியில் இன்று நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் அக்கட்சி தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது,
ஏன் புதுச்சேரிக்கு வந்தீர்கள் என கேட்கிறார்கள், இதைப்போலவே அப்போது எம்ஜிஆரிடமும் கேட்டார்கள். புதுச்சேரி மக்கள் நல்ல ஆட்சி, நல்ல கல்வி, நல்ல மருத்துவம் போன்றவற்றுக்காக ஏங்கிக் கொண்டுள்ளனர்.
அன்று எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது, தமிழகத்துக்கு மட்டும் யோசிக்கவில்லை, புதுச்சேரிக்கும் சேர்த்து திட்டங்கள் வைத்திருந்தார்.
அதுபோல விஜய்யும் புதுச்சேரிக்கும் சேர்த்து திட்டங்கள் வைத்துள்ளார். அதனை அவர் பேசும்போது சொல்வார்.
தவெக மூலமாக புதுச்சேரியின் அடுத்த 50 ஆண்டுகால வரலாறு புதிதாக எழுதப்படும். கூடிய விரைவில் புதுச்சேரியில் மிகப்பெரிய பிரச்சாரத்தை தலைவர் விஜய் நடத்துவார்.
புதுச்சேரியில் ஒரு மாற்றம் வருமா, வேலைவாய்ப்பு, சிறந்த கல்வி கிடைக்குமா என்ற ஏக்கம்தான் இவ்வளவு பெரிய கூட்டத்தை இங்கே கூட்டியுள்ளது.
தவெக தலைவர் விஜய் வரும் 2026 தேர்தலில் தமிழக முதல்வராக உருவாகி, புதுச்சேரியிலும் தவெக முதல்வரை உருவாக்குவார். அதற்கான எழுச்சி பயணமாக இன்றைய பயணம் அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b