Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 9 டிசம்பர் (ஹி.ச.)
தமிழகத்துடன் சேர்ந்து புதுச்சேரியிலும் அடுத்தாண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தவெக பொதுக்கூட்டம் இன்று புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் அக்கட்சி தலைவர் விஜய் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது,
ஒன்றிய அரசு தான் தமிழகத்தை ஒரு மாநிலமாகவும், புதுச்சேரியை யூனியன் பிரதேசமாகவும் பார்க்கிறது.
ஆனால் நாம் வேறு வேறு கிடையாது. எந்த மாநிலமாக இருந்தாலும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள் நம் உறவுதான்.
1977-ல் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பதற்கு முன்பாகவே, எம்ஜிஆர் 1974ல் புதுச்சேரியில் ஆட்சியை பிடித்தார். எம்ஜிஆர் நமக்கானவர், அவரை மிஸ் பண்ணிடாதீங்க என தமிழ்நாட்டிற்கு அலெர்ட் செய்ததே புதுச்சேரி தான். அப்படிப்பட்ட புதுச்சேரியை மறக்க முடியுமா?.
தமிழக மக்களைப் போலவே, புதுச்சேரி மக்களும் கடந்த 30 ஆண்டுகளாக என்னை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால் இந்த விஜய் தமிழகத்துக்கு மட்டும்தான் குரல் கொடுப்பார் என நினைக்காதீர்கள். புதுச்சேரி மக்களுக்கும் சேர்ந்து குரல் கொடுப்பேன். அது எனது கடமையும் கூட.
புதுச்சேரி அரசாங்கம் தமிழகத்தில் உள்ள திமுக அரசாங்கத்தை போன்றது கிடையாது. வேறு ஒரு அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சியாக இருந்தாலும், அந்த நிகழ்ச்சிக்கு தன்னெழுச்சியாக வரக்கூடிய மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, பாரபட்சம் இல்லாமல் இந்த அரசு நடந்து கொள்கிறது.
புதுச்சேரி முதல்வருக்கு எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதை பார்த்தாவது தமிழகத்தில் உள்ள திமுக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் கற்றுக் கொள்ள மாட்டார்கள். வரப் போகின்ற தேர்தலில் அவர்கள் 100% கற்றுக் கொள்வார்கள். மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
புதுவை அரசு கூட்டணி ஆட்சியில் இருந்தாலும் புதுச்சேரியை ஒன்றிய அரசு எந்த விஷயத்திலும் கண்டு கொள்ளவில்லை என்பது மக்களுக்கே தெரியும். மாநில அரசு கோரிக்கை மட்டுமா அவர்கள் கண்டு கொள்ளவில்லை? இங்கு வளர்ச்சி ஏற்பட அவர்கள் துணை நிற்கவில்லை என கேள்விப்படுகிறோம். புதுச்சேரிக்கு இன்னும் மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை. பலமுறை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மூடப்பட்ட ஐந்து மில்கள், பல்வேறு தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க இன்னும் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை.
பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக அவர்கள் எதையுமே செய்யவில்லை. புதுச்சேரியில் ஒரு ஐடி கம்பெனி உருவாக வேண்டும் என்ற எண்ணம் கூட கிடையாது.
இது குறித்து யார் பேசினாலும் அவர்களின் காதுகளில் விழவே இல்லை. தமிழ்நாட்டை ஒதுக்குவது போல், புதுச்சேரியையும் ஒன்றிய அரசு ஒதுக்கக்கூடாது. இந்திய அளவில் ரேஷன் கடைகளே இல்லாத இடம் புதுச்சேரிதான். புதுச்சேரி மக்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிகொள்கிறேன். திமுகவை நம்பாதீர்கள்; அவர்கள் நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள்.
வரவிருக்கும் புதுச்சேரி தேர்தல் களத்தில் தவெக கொடி பட்டொளி வீசி பறக்கும்.
வெற்றி நிச்சயம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b