ஹெலிகாப்டர் பயிற்சி முடித்த விமானிகளுக்கு ‘தங்கச் சிறகுகள்’ விருது
ராணிப்பேட்டை, 9 டிசம்பர் (ஹி.ச.) ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இந்திய கடற்படை விமான தளம் ஐ.என்.எஸ். ராஜாளி செயல்பட்டு வருகிறது. இந்த விமான தளத்தில் ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளி (HTS) வழங்கிய 22 வாரக் கடினப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 16 கட
Thangam Siragukal


ராணிப்பேட்டை, 9 டிசம்பர் (ஹி.ச.)

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இந்திய கடற்படை விமான தளம் ஐ.என்.எஸ். ராஜாளி செயல்பட்டு வருகிறது.

இந்த விமான தளத்தில் ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளி (HTS) வழங்கிய 22 வாரக் கடினப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 16 கடற்படை விமானிகளுக்கான பட்டம் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

இந்த 105-வது ஹெலிகாப்டர் பயிற்சி நிறைவு விழாவில், கிழக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சஞ்சய் பல்லா சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு, அணிவகுப்பை பார்வையிட்டு, வீரர்களின் மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர், பயிற்சியில் சிறப்பாகப் செயல்பட்ட விமானிகளுக்கு பட்டமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த பயிற்சியில் ஒட்டு மொத்த திறனில் சிறந்து விளங்கியவர்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.

மேலும் விமானப் பயிற்சியில் சிறந்து விளங்கிய 16 வீரர்களுக்கு ‘தங்கச் சிறகுகள்’ (Golden Wings) என்ற விருது வழங்கப்பட்டது. பறக்கும் திறனில் அதிக மதிப்பெண் பெற்ற லெப்டினன்ட் ஆதித்யா சிங் கவுருக்கு கிழக்கு கடற்படை தளபதி ரோலிங் டிரோபி வழங்கப்பட்டது. அதே போல் மொத்த திறனில் முதலிடம் பெற்ற லெப்டினன்ட் நிகில் தியாகிக்கு கேரள ஆளுநர் ரோலிங் டிரோபி விருது வழங்கப்பட்டது.

ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை தளம், இந்திய கடற்படை, கடலோர பாதுகாப்புப் படை மற்றும் நட்பு நாடுகளின் ஆயுதப்படைகளில் இருந்து இதுவரை 884 விமானிகளுக்கு உயர்தர ஹெலிகாப்டர் பயிற்சி வழங்கிய முக்கிய மையமாக விளங்குகிறது. இங்கு பயிற்சி நிறைவு பெற்ற புதிய விமானிகள் விரைவில் இந்திய கடற்படையின் முன்னணி பிரிவுகளில் இணைக்கப்பட உள்ளனர்.

இவர்கள் வருங்காலத்தில் கண்காணிப்பு, ரோந்து, தேடல்-மீட்பு (SAR), கடல் கள்வர் எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட மிகுந்த பொறுப்புகள் மிக்க பணிகளில் ஈடுபட உள்ளனர்.

இந்த விழா, இந்திய கடற்படையின் தொழில்நுட்ப திறன் மற்றும் மனிதவள மேம்பாட்டை பிரதிபலிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN