Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 9 டிசம்பர் (ஹி.ச.)
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகர மன்ற தலைவர் ராஜ ராஜேஸ்வரியின் கணவரும், திமுக மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் போடி நகர மன்ற 29-வது வார்டு கவுன்சிலருமான சங்கர் ஏலக்காய் வர்த்தகம் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், ஏலக்காய் வர்த்தகத்தில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில், வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என திமுக நிர்வாகி சங்கருக்கு அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.
ஆனால், அதற்கு சங்கர் ஆஜராகாத நிலையில் போடியில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், போடி ரயில்வே பாலம் அருகே உள்ள சங்கருக்கு சொந்தமான ஏலக்காய் குடோனின் பூட்டை உடைத்தும் சோதனையிட்டனர். அப்போது, வருமான வரித்துறை அதிகாரிகளுடன் இணைந்து 50-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை மற்றும் ஜிஎஸ்டி அதிகாரிகளும் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், சங்கர், அவரது மனைவி ராஜ ராஜேஸ்வரி மற்றும் மகன் லோகேஷ் ஆகியோர் தலைமறைவாகினர். அதனால் ஏலக்காய் வர்த்தகத்தில் சங்கருக்கு தொடர்புடைய நபர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து, இரண்டு நாட்களுக்கு முன்பு போடியில் உள்ள வீட்டிற்கு வருகை தந்த சங்கரின் மனைவி ராஜராஜேஸ்வரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர்.
அவரை தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த திமுக நிர்வாகி சங்கர் நேற்று காலை (டிச.8) அவரது இல்லத்திற்கு வருகை தந்து வருமானவரித் துறை அதிகாரிகள் முன் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், இரவிலும் தொடர்ந்து இன்று காலை முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து நான்கு நாட்களாக வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, ஜிஎஸ்டி துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஏலக்காய் வர்த்தகத்தில் சங்கர் சட்ட விரோதமாக கோடிக்கணக்கில் மத்திய அரசுக்கு வரி வருவாய் இழப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும், சோதனை முடிவில் முழு விவரங்கள் தெரிவிக்கப்படும் எனவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN